பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று முடிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உள்ளிட்ட 12 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
தகுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா, முதலிடம் பிடித்ததால், அவருக்கு தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, அதிகபட்சமாக 89 புள்ளி 45 மீட்டர் தூரமும், பாகிஸ்தான் வீரர் நதீம், 92 புள்ளி 97 மீட்டர் தூரமும் எறிந்தனர்.
இதன்மூலம் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கமும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் வெள்ளிப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.