நியூயார்க்கில் அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பை நடத்தி வெளிநாடுவாழ் இந்தியர்கள் சுதந்திர தின விழா கொண்டாடினர்.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோவில் மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்டது. இதனை பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் திறந்து வைத்தார். இது ஹிந்துக்களின் அடையாளம் என்று உலகம் முழுவதும் பாராட்டுப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், நியூயார்க் நகரில் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்திய சுதந்திர தின விழா பேரணி நேற்று நடைபெற்றது. இதில், 40க்கு மேற்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்று, நகரை வலம் வந்தன.
குறிப்பாக, 19 அடி நீளம், 9 அடி அகலம், 9 அடி உயரம் கொண்ட அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிவமைப்பு கொண்ட வாகனமும் இடம்பெற்றிருந்தது.
இந்த ராமர் கோவில் போன்ற வடிவமைப்பு இந்தியாவில் உருவாக்கப்பட்டு, விமானம் மூலம் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாகும். இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா, பன்கஜ் திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.
மதப்பாடல்கள் ஒலிப்பரப்பட்டு, இசைக்கருவிகள் இசைக்க, மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.