பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை குறித்தது.
2020 ஆம் ஆண்டு, பாங்காங் ஏரிக்கரையில் பாரத-சீன ராணுவத்தினருக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இம்மோதலின் போது, 20 பாரத வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனாவோ, இச்சம்பவம் தொடர்பான தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையே முறுகல் நிலை நீடித்து வந்தது. அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் இருந்து இரு நாட்டுப் படைகளும் விலகியது, இருநாட்டு உறவில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாரத ராணுவத்தின் ‘14 கார்ப்ஸ்’ ராணுவப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா, கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி பாங்காங் ஏரிக்கரையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை திறந்து வைத்தார்.
பாரத ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “சத்ரபதி சிவாஜி, வீரத்திற்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் வார்த்தையின் அடையாளமாக உள்ளார். அவரது வீர பாரம்பரியம், பல தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, பாரத ராணுவத்தின் நாட்டுப்பற்று மற்றும் வீரத்தின் அழுத்தமான சின்னமாக உள்ளதை பறைசாற்றுகிறது.