தலித்துகள், சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் நலன்களுக்கான பி.ஆர்.அம்பேத்கரின் சிந்தனைகள் அரசுக்கு உத்வேகம் அளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்பேத்கரின் உருவப் படத்துக்கு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஏழைகளின் நலன்களை மனதில் கொண்டே பாஜக அரசின் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான டாக்டர் அம்பேத்கரின் தலித் மற்றும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் நலன்களுக்கான சிந்தனைகள் அரசுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அவர் அழியாத பங்களிப்பை ஆற்றியுள்ளார். நமது தேசத்துக்கான அவரது கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டிய தருணம் இதுவாகும் எனத் தெரிவித்துள்ளார்.