சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள சீதா ராமச்சந்திர மூர்த்தி கோயில் அர்ச்சகரான கண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘சேலம் மாநகராட்சியை சேர்ந்த தி.மு.க பெண் கவுன்சிலரான மஞ்சுளா நைட்டி அணிந்துகொண்டு நான் அர்ச்சகராக பணியாற்றும் கோயிலுக்குள் வந்தார். இதுபோல உடை அணிந்து கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறி அவரை தடுத்தேன். இதனால் அவரது ஆதரவாளர்கள் என்னை தாக்க முயன்றனர். இதனையடுத்து, அவரின் புகாரின் பேரில் ஆகம விதிகளுக்கு முரணாக கோயிலை 12 மணிவரை திறந்து வைத்ததாகவும், பெண்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என்று கூறியும் என்னை பணி இடைநீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. அறநிலையத்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் மற்றும் தி.மு.க பெண் கவுன்சிலர் மஞ்சுளா ஆகியோர் ஜூன் 1ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.