அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் பெரியார் பல்கலை செயல்பாடுகள், சமீப காலமாக சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. கடந்த மாதம், ‘மாணவர்கள் யாரும், அரசியல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது’ என, பல்கலை நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு, மாணவர்கள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்த வரிசையில், பல்கலையின் முதுநிலை வரலாறு பாடப்பிரிவில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்த செமஸ்டர் தேர்வில், ஜாதி குறித்த கேள்வி இடம் பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வினாத்தாளில், ‘தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி எது?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.இதற்கான பதிலை தேர்வு செய்ய, நான்கு குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், ‘மகரர்கள், நாடார்கள், ஈழவர்கள் மற்றும் ஹரிஜன்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கேள்வியை பார்த்த மாணவர்கள் பலர், தேர்வு முடிந்ததும் வினாத்தாளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
‘சமூக நீதி பேசும் தி.மு.க., ஆட்சியில், தாழ்த்தப்பட்ட ஜாதி எது என்பது குறித்து, பல்கலை வினாத்தாளில் கேள்வி இடம்பெற்றது எப்படி?’ என, கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேள்வி தொடர்பாக விசாரிக்க, தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.