புதுடில்லி-‘கிழக்கு லடாக் எல்லை பகுதியில் நிலைமை இன்னும் முற்றிலுமாக சீரடையவில்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதை தொடர்ந்து, இந்தியா -சீனா இடையே மோதல் வெடித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த பிரச்னையில், ராணுவ அதிகாரிகளின் பேச்சில் சுமுக தீர்வு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, இரு தரப்பு ராணுவமும் படைகளை படிப்படியாக திரும்ப பெற துவங்கின. 16வது சுற்று பேச்சில்எட்டப்பட்ட முடிவின்படி, கோக்ரா ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருதரப்பு படைகளும் சமீபத்தில் திரும்ப பெறப்பட்டன.
இந்நிலையில், எல்லை நிலவரம் குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது:இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே நடந்த பேச்சில், சில ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட்டாலும், எல்லையில் நிலைமை இன்னும் முழுதாக சீரடையவில்லை. முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டோம் என கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.