உள்நாட்டு நிறுவனமான கல்யாணி காஸ்ட் டெக் (கே.சி.டி) இந்த மாதம் 1.4 மில்லியன் டாலர் மதிப்புள்ள 360 உலர் சரக்குக் கொள்கலன்களை (கண்டெய்னர்) ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், வரும் மாதங்களில் ஐரோப்பிய ஷிப்பிங் லைனிலிருந்து இதுபோன்ற தனிப்பயனாக்க ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெறவுள்ளது. ஏற்றுமதி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதன் மூலம், சரக்கு கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் இந்த நிறுவனமும் இணைந்துள்ளது. உலகில் பெரும்பாலான கொள்கலன்களை சீனா தான் இன்றுவரை உற்பத்தி செய்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகளும் கொள்கலன் விநியோகத்திற்காக சீனாவையே சார்ந்துள்ளன். இத்தகைய கடுமையான போட்டிக்கிடையே கல்யாணி காஸ்ட் டெக் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது பாராட்டத்தக்கது. இந்த சீன ஆதிக்கப்போக்கை மாற்றியமைக்க மத்திய அரசும் சில சலுகைகளை அளிக்க வேண்டும் என கே.சி.டியை சேர்ந்த நரேஷ் குமார் கோரியுள்ளார். “பாரதத்தில் சரக்கு கொள்கலன் உற்பத்தியை பெருமளவில் ஊக்குவிக்க உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (பி.எல்.ஐ) செயல்படுத்தப்பட வேண்டும். கண்டெய்னர்கள் தயாரிக்க பயன்படும் கார்டன் எஃகு கிடைப்பது, மூலை வார்ப்புகளின் ஆதாரங்கள், குறைந்த அளவிலான ஆட்டோமேஷன் தொழில் நுட்பம் உள்ளிட்ட சிக்கல்கள் இங்கு நிலவுகின்றன. பாரதத்தில் கொள்கலன்கள் தயாரிப்பதற்கான உள்நாட்டு திறனை வளர்ப்பதில் உள்ள இத்தகைய சில தடைகள் நீக்கப்பட வேண்டும். அரசிடம் இருந்து ஆதரவு கிடைத்தால், உலக சந்தையில் இருந்து மொத்த ஆர்டர்களைப் பெறலாம்” என்றார். ரயில்வே துறையின் பொதுத்துறை நிறுவனமான கான்கோர், சுமார் 37,500 கொள்கலன்களை வைத்திருக்கிறது, அவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவை. கான்கார் நிறுவனம் சமீபத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் 18,000 கொள்கலன்களை தயாரிக்க ஒப்பந்தம் வழங்கியுள்ளது. மேலும், கான்கோர் நிறுவனம், ‘ஆத்மநிர்பர் பாரத்’ நோக்கிய ஒரு படியாக நாட்டில் ஷிப்பிங் தர கன்டெய்னர்களை உற்பத்தி செய்வதற்கான திறனை மேம்படுத்த இத்துறையை சேர்ந்த பல நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இப்போது கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.