சுர்குஜா, சத்தீஷ்காரின் சுர்குஜா நகரில் அம்பிகாப்பூர் பகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசும்போது, இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே. இந்தியாவை தாய்நாடாக யாரொருவர் நினைக்கின்றாரோ அவர் ஓர் இந்து. எந்தவொரு மதத்தினை பின்பற்றுபவராகவும், என்ன உடை அணிபவராகவும் இருந்தபோதும் அவர் ஓர் இந்துவே. இதுவே உண்மை. இந்த உண்மையையே சங்கம் உரக்க பேசி வருகிறது. ஏனெனில் பல நூற்றாண்டுகளாக நாம் ஒன்றுபட்டு உள்ளோம் என பகவத் கூறியுள்ளார். இந்தியாவை மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்நாடாக நினைக்கும் அனைவரும் இந்துக்களே. எந்தவொரு நபரின் மதவழிபாட்டை மாற்ற முயற்சிக்க வேண்டாம் என அவர் பேசியுள்ளார்.
சங்கம் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சங்கத்தில் இணைவதே சிறந்த வழி. சங்கத்தின் கிளைக்கு வந்த பின்னரே சங்கம் பற்றி ஒருவர் புரிந்து கொள்ள முடியும். சங்கத்தின் கிளைக்கு வருவதற்கு எந்த கட்டணமும் இல்லை. இனிப்பை அதனை சுவைத்த பின்னரே அறிய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருபுறம் வேற்றுமை பற்றிய விவாதம் போய் கொண்டிருக்கிறது. ஆனால், ஒவ்வொருவரும் தொடர்ந்து ஒன்றாகவே உள்ளோம். ஒவ்வொருவரும், பல ஆண் மற்றும் பெண் கடவுள்களை கொண்டிருக்கிறோம். கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் தேசத்தில் உள்ளனர். வேத காலத்தில் இருந்து, இது பார்க்கப்பட்டு வருகிறது. குறுகிய மனம் படைத்த மக்கள் அவர்களுக்குள் மோதி கொள்கின்றனர்.
இந்தியாவில் ஒரேயொரு வழிபாடோ, ஒரே மொழியோ இல்லை. பல சாதிகள் உள்ளன. இருந்தபோதும் இந்தியா ஒன்றாகவே உள்ளது. அரசர்கள் மாறி வரலாம். ஆனால், இந்தியா எப்போதும் ஒரேமாதிரியாகவே உள்ளது என்று அவர் பேசியுள்ளார். வான்வெளியை போன்று சங்கமும் ஒப்பிட முடியாதது. வாசிப்பது, எழுத்தின் வழியே சங்கத்தின் அர்த்தம் பற்றி யூகிக்க முடியாது என்றும் மோகன் பகவத் பேசியுள்ளார்.