காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை காவிரி சங்கமத்திற்குஒப்பானது என்று காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் கே. வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து காசி சென்று 5வது தலைமுறையாக அங்கு வாழ்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த இவர், முதன் முறையாக காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினராக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காசி தமிழ் சங்கமத்தையொட்டி பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி அரசு, முதன் முறையாககாசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. காசியில் கங்கை இருக்கிறது, விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர், சோயி அம்மன்இருக்கிறார்கள். கங்கையில், புனித நீராடவும், கடவுள்களை தரிசிக்கவும், தமிழகத்தின் கிராமங்களில் உள்ளவர்கள் கூட ஒரு முறையாவது வரவேண்டும் என்று விரும்புவார்கள். ஏற்கனவே வந்தவர்களைவிட இப்போதுகூடுதலாக வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் மக்கள் வருகையால் காசிக்கும் தமிழகத்துக்கும் இடையேயான உறவும் அதிகரிக்கும். காசிநாதர் ஆலயம் மிகக் குறுகலாக சுமார் 1,000 பேர் வரைதான் ஏற்கெனவே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், தமிழகத்தில் இருந்தும் தென்மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் காசிக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த பிரதமர் மோடி, விஸ்வநாதர் ஆலயத்தை விரிவாக்க உறுதி மேற்கொண்டார். தற்போது இதனை கடல் போல் பரந்த பிரகாரமாக விரிவுப்படுத்தியுள்ளார். இதனால் இப்போது தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்யமுடியும். முன்பெல்லாம் அன்னதானம் இல்லை, கடந்த ஆறு மாதமாக கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுவதோடு பிரசாதமும் வழங்கப்படுகிறது. உலகத்திலேயே கிடைக்காத மணிகர்னிகா தீர்த்தம், விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகிலேயே உள்ளது. இந்த தீர்த்தத்தை கையில் எடுத்து வந்து நேரடியாக விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பிரமாண்டமான கலையரங்கு கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோயில்களில் பாராயணங்களும், கச்சேரிகளும் நடப்பது போல, காசியிலும் நடத்துவதற்கு வசதியாக இந்தக் கலையரங்கு அமைந்துள்ளது” என பெருமையாகக் குறிப்பிட்டார்.