பி.எப்.ஐ பயங்கரவாதத்தை பரப்புகிறது

0
82

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற முஸ்லிம் மத அடிப்படைவாத அமைப்பு 2006ல் தொடங்கப்பட்டது முதல், அந்த அமைப்பு, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் வகுத்தல், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றுதல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளித்தல், பல்வேறு முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்த்தல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியுதவி பெறுதல், ஹிந்து அமைப்பினர் மீதான கொடூரத் தாக்குதல், கொலைகள், கட்டாய மதமாற்றம், மத கலவரம், வெறுப்புணர்வு, வன்முறையை ஏற்படுத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பி.எப்.ஐ அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியையும், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பையும் ஒப்பிட்டு பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமித்ஷா,

அரசியலுக்கு அப்பாற்பட்ட தடை: “நான் பி.எப்.ஐ அமைப்பும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று தான் என்று கூறவில்லை. பி.எப்.ஐ மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதே பி.எப்.ஐ உறுப்பினர்கள் மீதான வழக்குகளை காங்கிரஸ் திரும்பப்பெற்றது. நாங்கள் அப்போது அதை தடுக்க முயற்சித்தோம். தற்போது நாங்கள் வெற்றிகரமாக பி.எப்.ஐ அமைப்பை தடை செய்துவிட்டோம். பி.எப்.ஐ மதமாற்றம், பயங்கரவாதத்தை பரப்புகிறது என நான் நம்புகிறேன். பயங்கரவாத செயலுக்கான மூலப்பொருட்களை தயாரிக்க முயற்சிக்கிறது. நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான பல்வேறு செயல்களில் பி.எப்.ஐ மேற்கொண்டு வருவதற்கான பல்வேறு ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. அவர்கள் மீதான நடவடிக்கையைத் தள்ளிப்போடுவது தேசத்தின் பாதுகாப்பில் சுணக்கம் காட்டுவதாகிவிடும். பி.எப்.ஐ தடை அரசியலுக்கு அப்பாற்பட்டது” என்றார்.

போட்டியே இல்லை: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு போட்டி இல்லை என்று நம்புகிறேன். பிரதமர் மோடியுடன் சேர்ந்து நாடு முழு மனதுடன் முன்னேறி வருகிறது. மக்கள் தற்போது குடும்ப கட்சிகளின் ஆட்சியில் இருந்து மாறி பா.ஜ.கவின் வளர்ச்சி அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளனர். கர்நாடகாவில் பா.ஜ.க முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 மாதங்களில், நான் 5 முறை கர்நாடகாவிற்கு சென்றுள்ளேன். அந்த மாநில மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே கர்நாடகாவில் பா.ஜ.கவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெறும்” என தெரிவித்தார்.

அச்சப்பட ஏதுமில்லை: அமெரிக்காவிவில் இருந்து செயல்படும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய அளவிற்கு சரிவை சந்தித்தது. அந்த அறிக்கையின் உண்மை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதில்; அளித்த மத்திய அரசு, ‘‘எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் குழுவை அமைத்தால், அதில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஹிண்டன்பர்க் அதானி விவகாரத்தை கையாளும் திறன் செபிக்கு உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது. இந்த சூழலில், அதானி விவகாரம் தொடர்பாக இந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, “அதானி குழும விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கைப் பற்றி விமர்சிப்பது சரியாகாது. ஆனால், அதானி குழும விவகாரத்தில் பா.ஜ.க அச்சப்படவும் எதுவும் இல்லை; மறைக்கவும் ஏதுமில்லை” என்று கூறினார்.

பாரம்பரியத்தை நிலை நிறுத்தும் முயற்சி: இஸ்லாமியப் பெயர்கள் கொண்ட நகரங்கள், தெருக்கள், சில அரசு கட்டிடங்களின் பெயர்கள் பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளால் மாற்றப்பட்டு வருவதாக எழும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “வரலாற்றில் யாருடைய பங்களிப்பும் நீக்கப்படக் கூடாது என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. ஆனால் நாட்டின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் சில நடவடிக்கைகள் எடுக்கும்போது அதை யாரும் எதிர்க்கக் கூடாது. ஏற்கெனவே காலங்காலமாக நிலைத்திருந்த எந்தப் பெயரையும் நாங்கள் மாற்றவில்லை. இருந்த பெயரை மாற்றி புதுப்பெயர்கள் திணிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பழைய பெயரை மீட்டெடுக்கிறோம். சில நகரங்களில் பெயர்கள் மாற்றப்பட்ட முடிவு என்பது நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் அரசால் எடுக்கப்பட்டது. அவை அரசுகளின் உரிமைக்கு உட்பட்டது” என தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி: ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் முன்னாள் பிரதமர் நேருவின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுவதாக வரும் புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, “நேரு ஆட்சியில் தான் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தால் நாட்டுக்கு பெரிய இழப்புகள் ஏற்பட்டன. ஆனால் இப்போது அது நீக்கப்பட்ட பின்னர் அங்கே நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களால் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளன. இது புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here