உத்தரப் பிரதேசம் பரேலி நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடைபெற்ற குடும்ப ஸ்நேக மிலன் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அந்த அமைப்பின் தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “வேற்றுமைகளை களைய வேண்டியது சங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். அனைத்து தீங்குகளில் இருந்தும் விடுபட்ட ஒரு சிறந்த சமூக சூழலை உருவாக்க வேண்டும். சமூகத்தில் இருந்து ஜாதி வெறி, சமத்துவமின்மை மற்றும் தீண்டாமை போன்றவை ஒழிக்கப்பட வேண்டும். சமூக ஆணவம் மற்றும் தாழ்வு மனப்பான்மை ஆகிய இரண்டுக்கும் முடிவு கட்ட வேண்டும். சமூகத்தின் பொருளாதார, சமூக மற்றும் கலாசாரத்தின் முக்கிய அம்சமாக குடும்பம் உள்ளது. குடும்பங்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி சமூகம் மற்றும் நாட்டை வலிமையாக்க சங்கம் முயற்சித்து வருகிறது. இதற்காக குடும்ப பிரபோதன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பாரதத்தின் குடும்ப முறை உலகில் மிகச்சிறந்தது. ஒற்றுமை மற்றும் தேசியவாதம் பற்றிய உணர்வு குடும்பங்களில் விழித்தெழுந்து செய்யப்படும்போது, நாடு வலிமை அடையும். குடும்பங்களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பின் மனப்பான்மை இருந்தால், பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தானாகவே தீர்க்கப்படும்.
தேசபக்தி, நல்லிணக்கம், கடன் மீட்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவை குடும்பங்களின் வாழ்க்கையின் தாரகமாக இருக்க வேண்டும். தேசபக்தி என்றால், நாட்டை வணங்க வேண்டும். அதாவது பாரதத்தின் மீது பக்தி இருக்க வேண்டும். அனைவரிடமும் நல்லெண்ணம் கொண்டு, நண்பர்களின் துன்பங்களை நீக்கி அவர்களை மேம்படுத்தவும் நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் பெறும் உடை, உணவு போன்றவை சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடன் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்தக் கடன்களை நாம் அடைக்க வேண்டும். மக்கள் நலன் கருதி அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள் காலங்காலமாக நினைவுகூரப்படுகிறார்கள். ஒழுக்கம் இல்லாமல் எந்த சமூகமும், தேசமும் முன்னேற முடியாது. தேசத்தை மீண்டும் ஒரு விஸ்வகுருவாக மாற்ற, வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். சங்கத்தின் சித்தாந்தத்தால் கவரப்பட்ட நாட்டு மக்கள் தற்போது நம்பிக்கையுடன் நமது அமைப்பை நோக்கிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். நமது அசல் மரபுகள் மற்றும் கலாச்சாரத்துடன் இணைந்திருப்பதன் மூலம் நாம் முன்னேற விரும்புகிறோம். தொண்டர்களின் நடத்தையால்தான் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிம்பம் சமுதாயத்தில் உருவாகிறது. தொண்டர்களின் நடத்தை சிறப்பாக இருந்தால், சங்கத்தின் பிம்பம் சிறப்பாக இருக்கும். ஸ்வயம்சேவகர்கள் வாரத்தில் ஒரு நாளாவது ஸ்மார்ட்போனை விட்டுவிட்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து, உணவு உண்டு, தேசம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் தொடர்பான தலைப்புகளைப் பற்றி விவாதிக்க வேண்டும். ஸ்வயம்சேவகர்கள் வெவ்வேறு பொருளாதார நிலை கொண்ட குடும்பங்களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பின் உணர்வை உருவாக்க முயற்சிக்க வேண்டும். பல்வேறு ஜாதிகள், மதங்கள், மொழிகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த குடும்பங்களுடன் நாம் நட்புறவைப் பேண வேண்டும். அவர்களை அடிக்கடி சந்தித்து, அவர்களுடன் அமர்ந்து சாப்பிடவும், கலந்துரையாடவும் வேண்டும். பாரதத்தை சேர்ந்த நாம் அனைவரும் ஹிந்துக்கள் தான். சிலர் வெவ்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டனர். எனினும் அவர்களுடைய முன்னோர்களும் ஹிந்துக்களே” என கூறினார்.