இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமான ஐ.ஆர்.சி.டி.சி, பாபா சாஹேப் அம்பேத்கர் யாத்திரை சுற்றுலாத் தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ‘தேக்கோ அப்னா தேஷ்’ எனப்படும் ‘நமது தேசத்தைப் பாருங்கள்’ என்ற முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் இந்த சுற்றுலாத் திட்டம் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களைப் பார்க்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. பாபா சாஹேப் அம்பேத்கர் யாத்திரை என்ற சுற்றுலாத் திட்டத்தின் முதல் பயணம் டெல்லியிலிருந்து ஏப்ரல் 2023ல் தொடங்குகிறது. இந்த சுற்றுலாத் திட்டத்திற்காக ஐ.ஆர்.சி.டி.சி, பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்க உள்ளது. 7 இரவுகள் மற்றும் 8 பகல்களைக் கொண்ட இந்த சுற்றுலாவின் முதல் பயணம், டெல்லியில் தொடங்கி முதலாவதாக மத்தியப் பிரதேசத்தின் பாபா சாஹேப் அம்பேத்கர் பிறந்த இடமான டாக்டர் அம்பேத் நகருக்கு (மாவ்) சென்றபின் அங்கிருந்து நாக்பூரில் தீக்ஷா பூமிக்கு செல்லும் வகையில் சுற்றுலாத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழியில் சாஞ்சி, கயா, சாராநாத், ராஜ்கிர், நாலந்தா, உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லும் ரயில், பின்னர் மீண்டும் டெல்லிக்குத் திரும்பும். இதில் பங்கேற்கும் சுற்றுலாப் பயணிகள், டெல்லி, மதுரா, ஆக்ரா கண்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் பயணத்தைத் துவங்கி நிறைவு செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.