பாரதம் செய்த உதவி மிகப் பெரியது

0
167

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, “கடந்த ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது அந்த நெருக்கடியில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறோம். இப்போது பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இலங்கை ரூபாய் மதிப்பு ஸ்திரமாக உள்ளது. சுற்றுலா தொழில் மீண்டு வருகிறது. உணவு, எரிபொருளுக்காக மக்கள் கூட்டம் அலைமோதவில்லை. மொத்தத்தில் இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. ஐ.எம்.எப் அமைப்பின் நிதியுதவி இந்த மாத இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு நிலைமை மேலும் மேம்படும். நாங்கள் இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டதற்கு பாரதம் தான் காரணம். மற்ற நாடுகள் செய்த உதவிகளைவிட பாரதம் எங்களுக்கு செய்த உதவி மிக அதிகம். ரூ. 32 ஆயிரம் கோடி மதிப்பிலான கடனுதவியை பாரதம் வழங்கியிருக்கிறது. இதுவே அப்போது எங்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இதற்காக நாங்கள் பாரதத்துக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். பாரதம் இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பாரதத்தின் ரூபாயை பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாரதம் உலக அளவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நாங்களும் அதனுடன் இணைந்து முன்னேறுவோம்” என தெரிவித்தார்.

இதனிடையே பெண்கள் தினத்தையொட்டி கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நிர்மலா சீதாராமன் உள்பட 3 சர்வதேச பெண் தலைவர்களால்தான் இலங்கையின் நெருக்கடி தணிந்து வருவகிறது. அவர்களில் முதன்மையானவர் பாரதத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாங்கள் திவாலாகி விட்டோம் என்று அறிவித்த பிறகும், அவர்தான் பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவையுடன் பேசி, எங்களுக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க முடிவு செய்தார். திவாலான ஒரு நாட்டுக்கு கடன் கொடுப்பது என்பது உண்மையிலேயே மிகவும் துணிச்சலான முடிவு. இதற்காக முதலில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த 3 பில்லியன் டாலர் உதவி மட்டும் நமக்கு அந்த நேரத்தில் அளிக்கப்படவில்லைஎன்றால் நாம் எவ்வளவு மோசமான சூழலில் சிக்கியிருப்போம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை” என்று புகழ்ந்தார். மேலும், இலங்கைக்கு உதவிய அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் எல்லன், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா ஜார்ஜிவா உள்ளிட்ட பெண் தலைவர்களையும் அவர் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here