கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல், குடியரசு தினத்தை ஒட்டி கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது. இதன்படி, மூன்று பேருக்கு பத்ம விபூஷண், ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெற்றன. விருது அறிவிக்கப்பட்டவர்களில், முதற்கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் கோபால், மாசி சடையன் உள்ளிட்ட 50 பேருக்கு கடந்த மாதம் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மீதமுள்ளவர்களுக்கு பத்ம விருதுகளை புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.