கோவை மாவட்டம், சூலுார் ஒன்றியம் முத்துக்கவுண்டன்புதுாரை சேர்ந்தவர் துளசி அம்மாள். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராஜாமணி. இருவரும் கடந்த நவம்பரில் காசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின் ஊர் திரும்பிய இருவரும், சிறந்த முறையில் ஏற்பாடு செய்தமைக்காக, பிரதமருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தனர்.தமிழில் நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பதில் அனுப்பியுள்ளார். அதில், ‘காசியில் நடந்த கலாசாரங்கள் மற்றும் மொழிகளின் சங்கமத்தில் நீங்கள் சிறந்த அனுபவத்தை பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நம் நாட்டின் பன்முகத்தன்மையை கண்டு உலகமே வியக்கிறது. அந்த பன்முகத்தன்மையே நம்மை பிணைக்கும் ஒற்றுமையின் இழையாகும். காசிக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான உறவு, பண்பாட்டு ஒற்றுமையை வெளிக்காட்டுகிறது. பல பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் நாகரிக பிணைப்புகளை வலுப்படுத்துவதே ஒரே பாரதம்; உன்னத பாரதம் என்பதன் நோக்கமாகும். காசி தமிழ் சங்கமத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பும், ஈடுபாடும், நாட்டை ஒன்றிணைக்கும் எனது முயற்சிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது,” என, பிரதமர் தெரிவித்துள்ளார். துளசி அம்மாள் கூறுகையில், “சாதாரண கிராமவாசி எழுதிய கடிதத்துக்கு, நாட்டின் பிரதமர் நன்றி தெரிவித்து, அதுவும் தமிழில் பதில் அனுப்பியது மிகுந்த மகிழ்ச்சி. தமிழக மக்கள் மீது பிரதமர் காட்டும் அன்புக்கு இது அடையாளமாக உள்ளது,” என்றார்.