தமிழக ஆளுநருக்கு நன்றி

0
186
  •  தமிழக அரசை விமர்சித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் வீட்டு இளம்பெண்கள் கொடுமைப் படுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ‘உண்மையை உலகுக்கு எடுத்து கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு நன்றி’ என சிதம்பரம் தீட்சிதர்கள் சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் பேசுகையில், “சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு நிர்வாகத்தில் கொண்டு வர வேண்டும் என ஹிந்து அறநிலைய துறை முயற்சித்தது. ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தீட்சிதர்களுக்கு உரியது என உச்ச நீதிமன்றம் கூறி விட்டது. இதை தமிழக அரசால் ஏற்க முடியவில்லை. அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தீட்சிதர்களை எப்படியாவது பழிவாங்க துடித்தார். இதற்காக கடலூர் மாவட்ட காவல்துறையை தீட்சிதர்களை நோக்கி ஏவினார். தீட்சிதர்களுக்குள் இருக்கும் ஒரு கறுப்பு ஆடு தீட்சிதர் குடும்பங்களில் பால்ய விவாகம் நடப்பதாக போட்டுக் கொடுத்துள்ளது. மேலிடத்தில் இருந்து கடலுார் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசனுக்கு உத்தரவு வந்தது. தீட்சிதர் வீட்டு இளம்பெண்களை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். ‘நாங்கள் பால்ய விவாகம் தான் செய்து கொண்டோம்’ என எழுதி கொடுக்க சொல்லி அச்சுறுத்தினர். ஆனால் யாரும் எழுதி கொடுக்கவில்லை. அதனால் குடும்பத்தினர் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அச்சுறுத்தினர்; பலரைகைது செய்தனர். மேலும் தீட்சிதர் வீட்டு இளம்பெண்களுக்கு கன்னித் தன்மை சோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் உலகளவில் தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனையை தீட்சிதர் குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்களுக்கு செய்தனர். \அப்போதே இதற்கு கடும் எதிரப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அதை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. பால்ய விவாகம் செய்யப்பட்டது என்றாலும் அது நிரூபிக்கப்பட்டால் தண்டனை என்பது இரண்டு ஆண்டுகள் தான். அந்த புகாருக்காக கைது செய்வதே தவறு என்ற நிலையில் இரு விரல் பரிசோதனை செய்திருப்பது தீட்சிதர் வீட்டு இளம் பெண்கள் மீது நடத்தப்பட்ட அதிகபட்ச கொடூரம். அந்த பெண்கள், உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. புகார் நகல் தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக ஆளுநரிடம் தேசிய மனித உரிமை கமிஷன் கேள்வி எழுப்பியது. இதையடுத்து தமிழக ஆளுநர், முதல்வருக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநர் இந்த விஷயத்தில் நேரடியாக களம் இறங்கினார். தனக்கு வேண்டப்பட்ட சிலரை அனுப்பி சிதம்பரம் தீட்சிதர் குடும்பத்தினரை சந்திக்க கூறினார். இரு விரல் பரிசோதனைக்கு உள்ளானவர்களிடமும் விசாரணை நடந்தது. அந்த தகவல்களை முழுமையாக சேகரித்த பின் தான் தமிழக ஆளுநர் பேட்டி கொடுத்துள்ளார். மேலும், இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதை அவர் கூறியுள்ளார். இப்படி, அடுத்தடுத்து இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பின் தீட்சிதர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை விட்டு கொடுக்கக் கூடாது என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். அதற்கு உரமூட்டும் வகையில் ஆளுநரின் பேட்டி அமைந்துள்ளது. அதற்காக தீட்சிதர்கள் சார்பில் அவருக்கு நன்றி. இந்த விஷயத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நடந்து கொண்ட அளவுக்கு கூட தமிழக மனித உரிமை ஆர்வலர்கள் நடந்து கொள்ளவில்லை என்பது வேதனை” என தெரிவித்துள்ளார்.

விஜயபாரதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here