சமீபத்தில், மத்திய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்ட அர்ஜூன்ராம் மேக்வால், அரசுமுறை பயணமாக மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்றார். அங்கு அவரிடம், அம்மாநிலத்தில் உள்ள புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு, மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு வன்முறைகள், டெல்லியில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அர்ஜூன்ராம் மேக்வால், “மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு அவ்வளவாக சரியாக இல்லை என்று கருதுகிறேன். முதலில் அதுபற்றி ஆய்வு செய்து விட்டு, பிறகு விரிவாக பேசுகிறேன். டெல்லியில் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான அவசர சட்டத்தை அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் கொண்டு வந்துள்ளோம். அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால், அங்கு அதுபற்றி பிறகு விவாதிக்கலாம்” என கூறினார்.