வீரபாண்டிய கட்டபொம்மன் பலிதான தினம் (16.10.1799)

0
443

தமிழகத்தில் ஆங்கிலேய கிறிஸ்தவர்களை எதிர்த்துப் போரிட்ட பாளையக்கார மன்னர். ஜனவரி 3, 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் – திக்விஜய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார். 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட போது அவருக்கு வயது 30. நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. கி.பி. 1797 -ல் முதலாவதாக ஆங்கிலேய தளபதி ஆலன்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட பெரும்படையுடன் வந்தார். இப்போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன்துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன்துரை, கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்து, அவரை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798-ல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 9, 1799 -ல் கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடந்த போரில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 -ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16, 1799 -ல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here