சி. பி. முத்தம்மா கொனெரி பெல்லியப்பா முத்தம்மா, ஜனவரி 24, 1924 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்தவர். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்தபோது இவருக்கு வயது 9. தான் கஷ்டப்பட்டாலும் 4 குழந்தைகளையும் நன்கு படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் அம்மா. மடிகேரியில் பள்ளிப் படிப்பு, சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். 3 முறை தங்கப் பதக்கம் வென்றார். வெளியுறவுத் துறையில் பணியாற்றவேண்டும் என்பது இவரது விருப்பம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்ற நாட்டின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.இவரைப் பணியில் சேரவிடாமல் தடுக்க பல முயற்சிகள் நடந்தன. இவரது திறமைக்கு முன்பு எதுவும் எடுபடவில்லை. நாட்டின் முதல் பெண் வெளியுறவு அதிகாரியாக 1949-ல் பணியில் சேர்ந்தார். அளவுகடந்த ஆர்வம், துடிப்போடு பணியைத் தொடங்கினார்.ஆண் பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடு, தனித்தனி விதிமுறைகள் இருந்தன. திருமணம் செய்துகொள்ள அரசிடம் முன்அனுமதி பெறவேண்டும். குடும்பப் பொறுப்பு பணித் திறனை பாதிக்கும் நிலை ஏற்பட்டால், பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் சட்டப் பிரிவில் கூறப்பட்டிருந்தது. பணி முதிர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் பெண்கள் உரிமை கோர முடியாது என்ற விதியும் இருந்தது. ‘இதுபோன்ற சட்டங்கள் பெண்ணுரிமை, சமத்துவம், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. இந்த பாலினப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முத்தம்மா. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர், இந்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது என்றும், இவர் பதவி உயர்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்றும் தீர்ப்பு கூறினார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு, ஆணாதிக்க கருத்து கொண்ட விதிகளைத் திருத்தி எழுத ஒரு வாய்ப்பாக அமைந்தது.நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். பர்மா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவில் தூதரக உயர் பொறுப்புகளில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் இவர்தான். 32 ஆண்டு அரசுப் பணிக்குப் பிறகு, 1982-ல் ஓய்வு பெற்றார்.இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளின் சமத்துவத்துக்காகப் போராடி அவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தந்தார்.
#cbmuthamma #சான்றோர்தினம்