கேரளாவின் எர்ணாகுளத்தில் ஆகஸ்ட் 3, 1916 ஆம் ஆண்டு பிறந்தார். இயற்பெயர் பாலகிருஷ்ணன் மேனன். லக்னோ பல்கலைக்கழகத்தில் இலக்கியம், சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஊடகவியலும் பயின்றார். அரசியல், பொருளாதாரத்தில் பல சீர்திருத்தங்களை செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் ஊடகத் துறையில் பணியாற்றினார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவர் உட்பட பல கைதிகளுக்கு விஷக் காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களை சிறை நிர்வாகம் கவனிக்காமல் வீதியில் வீசியது. ஒரு பெண்மணி பார்த்து மருத்துவமனையில் சேர்த்ததால் உடல்நலம் தேறினார். பின்னர் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் பணியாற்றினார். ஒருமுறை ரிஷிகேஷ் சென்றபோது சுவாமி சிவானந்தரை சந்தித்தார். அது இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார். ஆன்மிகப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். சுவாமி சிவானந்தர் 1949-ல் இவருக்கு தீட்சை அளித்து ‘சுவாமி சின்மயானந்தா’ என்று பெயர் சூட்டினார். இமயமலையில் இருந்த சுவாமி தபோவன மகராஜிடம் இவரை அனுப்பினார். அவரிடம் 8 ஆண்டுகள் கடுமையான ஆன்மிகப் பயிற்சிகளுடன் தத்துவமும் பயின்றார். இவரது ஆழ்ந்த ஞானம் பற்றி அறிந்த சிவானந்தர், கீதை கமிட்டி தொடங்குமாறு கூறினார். வேதாந்த கருத்துகளை உலகெங்கும் பரப்ப குருவின் ஆசியுடன் புறப்பட்டார். உலகம் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பண்டைய வேத, புராணங்கள், இதிகாசங்கள் குறிப்பாக பகவத்கீதையை முழுவதுமாக அறிந்தவர் என்று போற்றப்பட்டார். கடினமான ஆன்மிக விஷயங்கள், தத்துவங்களைக்கூட எளிமையாக எடுத்துக் கூறியதால் அவரது உரையைக் கேட்க ஏராளமானோர் கூடினர். உலகம் முழுவதும் ஆசிரமங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளை தொடங்கினார். கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ‘சின்மயா’ என்ற அமைப்பை உருவாக்கினார்.
அத்வைத வேதாந்த ஞானம், பகவத்கீதை, உபநிடதங்கள் ஆகியவற்றை உபதேசித்தவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப் பணியாற்றிய சுவாமி சின்மயானந்தா 77 வயதில் (1993) மறைந்தார்.