விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., – டி3 ராக்கெட்

0
6671

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, புவியை கண்காணிக்கும், ‘இ.ஓ.எஸ்., – 08’ செயற்கைக்கோளை சுமந்தபடி, ‘எஸ்.எஸ்.எல்.வி., – டி3’ ராக்கெட் இன்று (ஆகஸ்ட் 16) காலை, 9:17 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. எடை குறைந்த செயற்கைக்கோளை செலுத்த, எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, 9:17 மணிக்கு, இ.ஓ.எஸ்., – 08 செயற்கைக்கோளை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., – டி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து, 475 கி.மீ., உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

சிறப்பு அம்சங்கள்

* புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக, ‘இ.ஓ.எஸ்., – 08’ செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.50 கிலோ.
* ஓராண்டு ஆயுள் காலம் உடைய அதில், ‘எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் – ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர்’ ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன.
* விண்கலத்தில் இடம் ற்றுள்ள ஜி.என்.எஸ். எஸ்.ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகள் கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும்.
* எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன.
* இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
* இரவிலும் மிகத் துல்லியாக புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது.
* ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்வோரை கண்காணிக்கும் பணியிலும் இ.ஒ.எஸ்,., செயற்கைக் கோள் ஈடுபட உள்ளது. மிக துல்லியமான மற்றும் அத நவீன கருவிகள் உள்ளிட்டவை செயற்கைக் கோளில் உள்ளன.

திட்டம் 100% வெற்றி

இஸ்ரோ தலைவர் சோம்நாத் அளித்த பேட்டி: புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்கான இ.ஒ.எஸ்., செயற்கைக் கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இது மிகவும் வெற்றிகரமான பணி.
இந்த திட்டம் 100% வெற்றியடைந்துள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ராக்கெட் திட்டமிட்டபடி, செயற்கைக் கோளை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here