எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

0
5759
சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த் பட்கே. சாதாரண விவசாய குடும்பம் அவருடையது. குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்நிலைப்பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு புனாவில் இருந்த ராணுவ முகாமின் கணக்குப்பிரிவில் வேலையில் சேர்ந்தார்
 
மக்களிடம், ஆங்கிலேய அதிகாரிகள் வரி என்ற பெயரில் சுரண்டிக்கொண்டி ருப்பதையும், பஞ்சம், பட்டியினில் மக்கள் வாடுவதையும் பார்த்தார்.
 
கிராமங்களில் உணவு கிடைக்காமல், புனே நகருக்கு வேலைதேடி படையெடுத்த பல ஆயிரம் மக்கள், வீதிகளில் எலும்பும் தோலுமாக படுத்துக்கிடந்த பரிதாபக்காட்சி, அவர் மனதை உலுக்கியது. ஆனாலும் இறைவனை வேண்டுவதைவிட தன்னால் என்ன செய்துவிட முடியும் என்று மற்றவர்களைப்போன்ற மனநிலை தான் அவருக்கும் இருந்தது.
 
அப்படிப்பட்ட சாதுவையும், வெகுண்டெழ வைத்தது சுதந்திர போராட்டக்களம்.
மரணப்படுக்கையில் இருந்த தாயை காண்பதற்கு ஆங்கிலேய அதிகாரி விடுப்பு தரவில்லை. தாயின் மரணத்துக்கு செல்லவும், ஒரு ஆண்டு கழித்து சிரார்த்தம் செய்யவும்கூட விடுப்பு தரவில்லை.
 
அப்போதுதான் கொதித்தெழுந்த பட்கே மனதில் விடுதலை வேள்வி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
 
அதன்பிறகு வந்த விடுமுறைதினங்களில் கிராமங்களுக்குச் சென்று, பஞ்சம், பட்டினிக்கு காரணம் ஆங்கிலேயர்களின் சுரண்டல்தான். அவர்களை விரட்டியடிக்காமல் நமது கஷ்டங்கள் தீராது என்று பேசத்தொடங்கினார்.
தன்னிடம் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளித்தார்.
 
பட்கே பின்னால் இளைஞர்கள் சேரத்தொடங்கினர். புதிய படை உருவானது.
 
ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து. மக்களை சுரண்டிய, நிலப்பிரபுக்கள், வட்டித்தொழில் நடத்தியவர்களை குறிவைத்து செல்வத்தை அள்ளிவந்தது பட்கேவின் இளைஞர் படை. அப்படி சேர்ந்த பணத்தை கிராம மக்களுக்கு பகிர்ந்து அளித்தார் பட்கே.
 
பஞ்சத்தாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு வாசுதேவ் பல்வந்த் கடவுளாக தோன்றினார். அவரது புகழ் மகாராஷ்ட்ரா கிராமங்களில் காட்டுத்தீ போல பரவியது. தனது அரசு பதவியை உதறிய பட்கே, தன்னை ஆதரித்தவர்களில் தகுதி வாய்ந்த 300 பேரை படையில் சேர்த்தார்.
 
பின்னர் ஐதராபாத் சமஸ்தானம் சென்று மேலும் 500 பேரை சேர்த்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் குதித்தார்.
 
ஆங்கிலேயர்களின் கஜானா, ஆங்கிலேயர்களை ஆதரிக்கும் பெரும் செல்வந்தர்களின் சொத்துக்கள், பட்கேவின் படையால் கைப்பற்றப்பட்டது. அவரை ஆங்கிலேயர்கள் சல்லடைப்போட்டுத் தேடியும் அகப்படவில்லை.
 
பட்கேவை கைது செய்வது குறித்து ஆலோசிக்க 13.5.1876 அன்று புனே நகரில் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென போலீஸ் அதிகாரிகளின், கூட்டத்துக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தார் பட்கே.
 
‘‘பட்கேவை பிடிக்கவா ஆலோசனை. அவன் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருப்பானே.. எப்படி பிடிக்கப்போகிறீர்கள்?’’ என்று கேட்டபடி நின்ற பட்கேவை பார்த்து ஆங்கிலேய அதிகாரிகள் வெலவெலத்து போனார்கள். அதற்குள் அந்த அறைக்குள் பட்கேவின் படை நுழைந்தது. ‘‘கொல்லுங்கள்’’ … ஒற்றை ஆணைதான்.
 
அங்கிருந்த அத்தனை ஆங்கிலேய அதிகாரிகளும் பிணமாக கிட ந்தனர். அடுத்த வினாடி அங்கிருந்து மாயமானது பட்கேவின் படை.
 
அதிர்ந்து போன ஆங்கிலேய அரசு, ‘வாசுதேவ் பல்வந்த் பட்கேவை பிடித்து கொடுப்பவருக்கோ அல்லது அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என்று பட்கேவின் படத்துடன் போஸ்டர்களை புனே நகரில் ஒட்டியிருந்தது.
 
அன்று இரவே மும்பையிலும், புனேவிலும் மற்றொரு போஸ்டர் ஒட்டப்பட்டது. ‘பம்பாய் கவர்னரான ரிச்சர்ட் டெம்பிளின் தலையை கொண்டு வருபவர் வாசுதேவ் பல்வந்த பட்கேவிடம் 70 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கலாட்சி என்ற இடத்தில் 20.7.1879 அன்று தனியாக குதிரையில் வந்து கொண்டிருந்த வாசுதேவ் பல்வந்த் பட்கேவை நுாறு பேர் கொண்ட ஆங்கிலேய, நிஜாம் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தது.
 
அவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதும் அவர் சோர்ந்து போய்விடவில்லை. 13.2.1883 அன்று சிறைக்கதவை உடைத்துக் கொண்டு தப்பினார். மீண்டும் கைது செய்த ஆங்கிலேயர்கள் சிறையில் அடைத்தனர். அங்கு அவரை உடல் ரீதியாக பயங்கர கொடுமைப்படுத்தினர்.
 
கொடுமைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் பட்கே ஈடுபட்டார். ஏற்கனவே ஆங்கிலேயர்களின் கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல் உண்ணாவிரதத்தை தாங்கும் நிலையில் இல்லை. 17.2.1883 ல் அவரின் உயிர் பிரிந்தது.
 
8 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் குலை நடுங்க வைத்த அந்த மகான், தனது இன்னுயிரை நாட்டிற்காக நீத்த போது வயது 38.
வரலாறு தொடரும்…
 
பட்கேவின் டைரி குறிப்பு…
 
‘நான் ஆங்கிலேயர்களை அழித்தொழிக்க முடிவு செய்தேன். அதனால், காலை முதல் இரவு வரை, குளிக்கும்போதும், உணவு அருந்தும்போதும், தூங்கும் போதும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிரு ந்தேன். குறிபார்த்து சுடவும், குதிரை ஏற்றமும், வாள் வீசவும் பயிற்சி பெற்றேன். என் வலிமை மீதும், ஆயுதங்கள் மீதும் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தேன். ஒரு வாளையும், இரு துப்பாக்கிகளையும் எப்போதும் உடன் வைத்திருந்தேன்’
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடக்கிளம்பிய பட்கேவுக்கு புரட்சிவீரர் லாஹூஜி வஸ்தாத் சால்வேவோடு தொடர்பு ஏற்பட்டது. விடுதலைவீரர் மகாதேவ கோவிந்த ரானடேவின் சொற்பொழிவுகளை பட்கே கேட்டார். இதைத்தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக 2ஐக்கிய வர்த்தினி சபா’ என்ற அமைப்பை நிறுவி இளைஞர்களை பட்கே ஒருங்கிணைத்தார். பின்னர் சுதந்திர ரகசிய சங்கம் என்ற அமைப்பை நிறுவி இளைஞர்களுக்கு போர் பயிற்சியை அளித்தார்.
* ‘ இந்திய சுதந்திர ஆயுதப்போராட்டத்தின் தந்தை’ என்று பட்கே, வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here