உத்தரப்பிரதேசத்தில் கூடுதலாக 10 மாவட்டங்களில் தீவிரவாத எதிர்ப்பு படையின் (ஏடிஎஸ்) 12 முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்.
உத்திரபிரதேசத்தில் கடந்த 2007 இல் தீவிரவாதத்தை ஒடுக்க ஏடிஎஸ் அமைக்கப்பட்டது. பாஜக ஆளும் உ.பி.யில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் ஏடிஎஸ் பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது இதன் கமாண்டோக்கள் கொண்ட முகாம்கள் மாநிலம் முழுவதிலும் ஆறு உள்ளன. இவற்றில் காஜியாபாத், வாரணாசியில் தலா ஒன்றூம், தலைநகரான லக்னோவில் 4 முகாம்களும் அமைந்துள்ளன.
முதல்வர் யோகியின் ஆட்சியில் இப்படையினர் சார்பில் இதுவரை 69 தீவிரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத செயலை தடுக்கும் பணியில் உள்ள ஏடிஎஸ் ஊக்குவிக்கும் வகையில் அதன் மேலும் 12 முகாம்கள் உபியில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், ஏடிஎஸ் கமண்டோக்களின் பயிற்சி நிலையங்களும் அடங்கும். இவை, உபியில் மதக்கலவர ரீதியாகப் பதற்றமுள்ள நகரங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன. புதிய முகாம்களுக்கான அறிவிப்பு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து வெளியாகி உள்ளது. எனவே, அதன் தாக்கமாக உ.பி.யில் தீவிரவாத நடவடிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்த்து இந்த புதிய முகாம்கள் அமைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.