பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தக்ஷசீலத்தில் காந்தாரா என்ற கண்காட்சி நடைபெற்றது. புத்தரின் சாம்பல் அங்கு புதைக்கப்பட்டதாலும், புத்தரின் பல் பாதுகாக்கப்பட்டு வருவதாலும் தக்ஷசீலம் பௌத்தர்களின் புனிதமான இடங்களுள் ஒன்று. பாகிஸ்தானின் சிந்து பகுதியை சேர்ந்த நௌஷரோ ஃபெரோஸைச் சேர்ந்த ஐந்து பௌத்த மதத்தினர் இதனை பார்வையிட்டனர். அப்போது அவர்கள், ‘பாகிஸ்தானில் சுமார் 650 பௌத்த குடும்பங்களே எஞ்சியுள்ளன. இங்கு எங்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், பல்வேறு காரணங்களால் பாகிஸ்தானில் பௌத்த மதம் அழிவின் விளிம்பில் உள்ளது. எங்கள் மதச் சடங்குகளைச் செய்வதற்கு பௌத்த கோயில், ஸ்தூபிகள் இல்லை. அடுத்தத் தலைமுறைக்கு மத போதனைகள், நடைமுறைகளை கற்பிக்கத் துறவிகள் இல்லை. நினைவில் உள்ள சில பழக்கவழக்கங்கள், சில புத்தகங்களின் அடிப்படையிலேயே சடங்குகளைக் கடைப்பிடித்து வருகிறோம். புத்தமதத்தைப் கற்பிக்க எதாவது ஒரு பௌத்த நாட்டிலிருந்து ஒரு துறவியை எங்களுக்கு அனுப்ப வேண்டும்’ என கூறினர்.