மாதா, பிதா, குரு, தெய்வம். இதன் தத்துவம், மாதாவும் பிதாவும் குருவும் தெய்வம் என்பது. குரு என்பது யார்? குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள்.
நம்மிடையே உள்ள அகங்காரம் என்ற ஆணவ இருளை நீக்குபவரே குருநாதர் ஆவார். அந்த வகையில் குரு பரம்பரையில் சத்குரு ஆனவர் மகாதேவர் சிவபெருமான். சிவபெருமான் பராசக்திக்கு உபதேசம் செய்ய, பராசக்தியானவள் நந்தியம்பெருமானுக்கு உபதேசம் செய்ய, நந்திதேவர் அஸ்வினி விஸ்விணி, திருமூலர், அகத்தியர் ஆகிய நான்கு சித்தபுருஷர்களுக்கு உபதேசம் செய்ததாக அறியப்படுகிறது. இவர்களின் மூலம் தோன்றிய பரம்பரை குரு பரம்பரையாக அறியப்படுகிறது.
இந்த குருவை எப்படி அணுகுவது? குருவை எப்படி கண்டுபிடிப்பது? உத்தம சிஷ்யனை அல்லது ஆத்ம சிஷ்யனை தேடி குருவே வருவதாக குரு புராணங்களில் அறியலாம். ராமானுஜர், ஆதிசங்கரர், போன்ற மகான்கள் தங்களுடைய சீடர்களை தாங்களே தேடிச்சென்று ஞானத்தை தந்துள்ளனர். சுவாமி விவேகானந்தரின் வரவுக்காக ராமகிருஷ்ண பரமஹம்சர் காத்திருந்த வரலாறும் உண்டு. உத்தம சிஷ்யனை அடைவதில் பெருமை கொள்வார்கள் குருமார்கள்.
உண்மையான குருவை அறிவது எவ்வாறு? “ யாரை பார்க்கும் போது யாரிடம் பேசும் போது நம்முடைய எண்ணம், சொல், செயல் அனைத்தும் அடங்கி, தான் என்கிற அகங்காரம் அற்ற நிலை ஏற்படுகிறதோ அவரே நமக்கு சத்குருவாய் அமைகிறார்.”
சுவாமி தத்தாத்ரேய மகரிஷி ஒரு திருடனையும் நாயையும் தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். மிகச் சிறந்த குருவுக்கு எடுத்துக்காட்டாக நாம் துரோணாச்சாரியாரை சொல்லலாம். ஏகலைவன் துரோணாச்சாரியாரை பார்க்காமலேயே அவரை உருவகப்படுத்தி பல வித்தைகளை கற்று அர்ஜுனனை விட வில்வித்தையில் சிறந்து விளங்கினான். துரோணாச்சாரியார் அவனை தனது ஆத்ம சீடனாக ஏற்றுக்கொண்டு குருதட்சணையாக அவனது வலது கை கட்டைவிரலை கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்.
இவனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அமையாது என்பதை அறிந்து, உத்தம சிஷ்யன் என்ற பெயரை இவன் பெற வேண்டும் என்பதற்காகவே கட்டை விரல் வாங்கினார், அவனும் புகழ் பெற்றான். அந்த வகையில் பல குருமார்கள் இந்த நாட்டில் தோன்றி இருக்கிறார்கள். பல சாம்ராஜ்யங்கள் குருவின் வழியே சென்று வென்றிருக்கிறது.
வீர சிவாஜியின் வெற்றிக்கு காரணம் ராமதாசர் என்ற மகானிடம் வைத்த குருபக்தி.
குருவின் பெருமைகளை விவரித்துக் கொண்டே போகலாம். குரு என்றுமே போற்றத்தக்கவர், தினமுமே அவருக்கு மரியாதை செலுத்துவது அவசியம் எனினும், வருடத்தில் ஒரு நாள் அவருக்கு விசேஷ பூஜைகள் செய்வது நம் நாட்டின் பாரம்பரியத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக அமைந்து வருகிறது. வேதங்களை தொகுத்த வியாச மஹரிஷியின் அவதார நாள் ஆனி மாதம் பௌர்ணமி. வியாச பூர்ணிமா என்றும் குரு பூர்ணிமா என்றும் என்றழைக்கப்படும் அன்றைய தினத்தில் நமது குருவுக்கு மரியாதை செய்வது மேன்மையை தரும். என்ன கலை கற்றாலும், அந்த குருவுக்கு வியாச பௌர்ணமியன்று சமர்ப்பணம் செய்து போற்ற வேண்டும்.
குரு பூர்ணிமா ஜூலை 24
நந்திஹனுமன்
nanthihanuman@gmail.com