கேரளாவில் ஒரே நாளில் 30 சதவீதம் உயர்ந்த கோவிட் பாதிப்பு: கேரள மாடல் தோல்வி
மாற்றம் செய்த நாள்: ஆக 25,2021 21:46
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்றைய (ஆக., 24) நிலவரப்படி 24,296 பேருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில், அதை விட இன்று கூடுதலாக 30% பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 31,445 ஆனது. இதனத் தொடர்ந்து டுவிட்டரில் கேரளா மாடலை கிண்டலடித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மாநில சுகாதார கட்டமைப்பு, கல்வியறிவு, கடந்த ஆண்டில் கோவிட் தொற்றுநோய் கட்டுப்படுத்தியது போன்றவற்றுக்காக கம்யூனிஸ்ட்கள் கேரளா மாடல் என்பதை புகழ்ந்தனர். பிற மாநிலங்கள் கேரளாவை பின்பற்ற வேண்டும் என்றனர். இன்று நிலைமை தலைகீழாகியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கோவிட் பாதிப்பு இறங்கு முகத்தில் இருக்கின்றன. ஆனால் கேரளாவில் மட்டும் மிக அதிக பாசிடிவ் விகிதம் காணப்படுகிறது. 25-ம் தேதி நிலவரப்படி நோய் உறுதியாகும் விகிதம் 19% ஆக உள்ளது. அதாவது 100 பேரை பரிசோதித்தால் 19 பேருக்கு தொற்று இருக்கும்.
அதிக பரிசோதனையால் அதிக பாதிப்பா?
கடந்த ஒரு மாதமாக நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பில் பாதி அளவு 3.6 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளாவில் பதிவாகிறது. இன்று அந்த எண்ணிக்கை பாதிக்கும் மேல் உயர்ந்துள்ளது. பரிசோதனைகள் அதிகம் செய்வதால் அதிக பாதிப்பா என்று பார்த்தால் அதுவும் இல்லை. தினசரி சுமார் 1.3 லட்சம் பரிசோதனைகள் கேரளாவில் செய்யப்படுகின்றன. அதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் தொற்று காணப்படுகிறது. தமிழகத்திலோ சுமார் 1.5 லட்சம் பரிசோதனைகள் தினமும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இங்கு சுமார் 1,500 பேரிடமே தொற்று கண்டறியப்படுகிறது. உ.பி., கர்நாடகா, மஹாராஷ்டிராவுடன் கேரளாவை ஒப்பிட்டாலும் இதே தான் நிலைமை.
இறப்புகளும் அதிகம்!
தொற்று பாதிப்பில் மட்டும் இந்த உயர்வு என்றால் இதனை கண்டுகொள்ள தேவையில்லை. ஆனால் தேசிய அளவுடன் ஒப்பிடும் போது உயிரிழப்புகளும் அதிகமாக பதிவாகின்றன. நேற்று (ஆக., 24) நாட்டில் கோவிட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 648. அதில் சுமார் 27% கேரளாவைச் சேர்ந்தவர்கள். அதாவது 173 பேர் இறந்துள்ளனர். இருப்பினும் ஐ.சி.யூ., படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் இல்லை. கோவிட் பரவலை தடுக்க ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அக்டோபரில் 3-ம் அலை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், கேரளாவில் 2-ம் அலையே ஓயவில்லை.