டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிச் சுற்றில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பவினாபென் படேல்.
ஜப்பானின் டோக்கியோ நகரில்நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் நேற்று மகளிருக்கான டேபிள்டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவு அரை இறுதி சுற்றில் பவினாபென் படேல், சீனாவின் ஜாங் மியாவோவை எதிர்த்து விளையாடினார். இதில் 34 வயதான பவினாபென் படேல்,உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜாங் மியாவோவை 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் பவினாபென் படேல்.
இந்நிலையில், இன்று நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிச் சுற்றில் பவினாபென் படேல், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் யிங் ஜாவுடன் மோதினார். ஆரம்பம் முதலே சீன வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். இதனால், பவினா தனது உத்திகளை செயல்படுத்த முடியாமல் திறனினார். இருப்பினும் அவர் தளர்வடையாமல் தனது முயற்சியைத் தொடர்ந்தார். 7-11, 5-11, 6-11 என்ற செட் கணக்கில் அவர் சீன வீராங்கனையிடம் தோல்வியுற்றார். இருப்பினும் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பவினாபென் படேல்.