பாரதியாரின் சுதேசி கப்பல் பற்று.

0
1457

இருபத்தி ஏழு வயது இளைஞன். மொத்த போலீஸும் எப்படானு சிக்குவான்னு காத்திட்டிருக்கு. பொண்டாட்டி பிள்ளைகளோடு அடுத்த நாட்டிடம் தஞ்சம் புகுந்தாச்சு. நாமளா இருந்தா என்ன செய்வோம்? மூனு வேள சோறு கிடைக்கிற இடத்தில் சத்தமில்லாம ஐக்கியமாயிருப்போம்.

பாரதி என்ன செஞ்சிருக்கான் பாருங்க.

வ.உ.சி கோவைச் சிறையில் அடைபட்டிருக்கிறார். அவர் ஆரம்பித்த சுதேசி கப்பல் கம்பெனிக்கு முதலீடு போட்ட பங்குதாரர்கள் கழுத்தை நெருக்கிட்டிருப்பது ஒருபக்கம். இன்னொரு பக்கம் இலவசத்தின் மீது இலவசம் கொடுத்து பிரிடிஷ்காரன் சுதேசிக்கப்பலை நசிச்சுட்டு இருக்கான். ஆண்டு நிதியறிக்கையின் படி சுதேசி கப்பல் கம்பெனியின் நட்டமாக 4,59,989 ரூபாய், 5 அணா, 10 பைசா .என்று கணக்குக் காட்டியிருந்தது. கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

இந்த சூழலில், கம்பெனியைக் காப்பாற்ற வேண்டுமானால் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியாவது கம்பெனியிடம் கொடுக்கணும். “இந்தியா” பத்திரிக்கை மூலம் எப்படி நிதி திரட்டுகிறான் பாருங்கள்.

“ கங்கை வெள்ளம் வேண்டுமென்று வானத்தை அண்ணாந்து பார்த்தக் கொண்டிருக்கும் பகீரதன் தலை மீது ஒரு சிறிய தூற்றல் உதிர்ந்தது போலச் சென்ற 10 தினங்களில் நமக்து சுதேசிக் கப்பல் தரும நிதிக்குக் கீழே குறிப்பிடப் பட்டிருக்கும் அதி சொற்ப தொகை மட்டும் சேர்ந்திருக்கிறது. ஆனால், இது பெரும்பாலும் புதுச்சேரியிலே மட்டும் சேர்ந்தது. அரையணாவும் காலணாவுமாக வசூலிக்கப்பட்டது. அடுத்த வாரத்தில் இன்னும் கொடுப்பதாக பல நண்பர்கள் வாக்களித்திருக்கிறார்கள். புதுச்சேரியைப் போல இத்தனை சொற்பத் தொகையேனும், தென்னிந்தியாவிலுள்ள ஒவ்வொரு பட்டணத்திலும் கிராமத்திலும் வருமானால், நமது நோக்கம் 10 தினங்களில் கைகூடிவிடும். ஆரம்பத்தில் தூற்றல்களாக இருந்த போதிலும், பகீரதன் கொண்டிருந்த தெய்வ பக்தியால் அவனுக்குக் கங்காப் பிரவாஹம் வந்தே தீர்ந்தது.

சுதேசி கப்பல் கம்பெனியார் பாரத நாட்டுப் பொது ஜனங்களிடம் அழியாத பக்தி பூண்டிருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணமும் நிறைவேறியே தீரும்” (மேலே இந்தியா பத்திரிக்கையில் பாரதி எழுதியது.

இதைத் தொடங்கி வைத்ததே பாரதி தான். முதல் நிதியாக ரூ 5/- கொடுத்திருக்கிறார். (அன்றைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ் 1.80/- (ஒரு ரூபாய் எண்பது காசு) அன்றைய சூழலில் பாரதிக்கு அது மிகப்பெரிய பணம்.

அது மட்டுமல்ல. ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை படம் 1க்கு, 6 பைசா. ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சரித்திரம் புத்தகம் 3 அணா. ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சரித்திரம் புத்தகம் ஆங்கிலத்தில் 6 அணா. என்று விற்று அந்தப் பணத்தையும் சுதேசி கம்பெனிக்கு அனுப்பியிருக்கிறார்.

தன் குழந்தையின் கடைசிச் சொட்டு உயிர் இருக்கும் வரை எப்படியாவது காப்பாற்றி விட துடிக்கும் தாய் போல, பாரதத் தாயின் இரட்டைக் குழந்தைகள் என்று புளகாகிதம் கொண்ட அந்த இரண்டு கப்பல்களையும் காப்பாற்ற முனைந்திருக்கிறான் பாரதி!

இப்ப சொல்லுங்க, இப்படி உடம்பிலிருக்கும் ஒவ்வொரு அணுவிலும் நாடு, நாட்டு விடுதலைக்காக உழைப்பவர்கள் என்று மட்டும் சிந்தித்த ஒரு மாமனிதனை நாம் இன்று மட்டும் நினைக்கணுமா இல்லை ஒவ்வொரு நாளும் நினைக்கணுமா?

#வந்தே_மாதரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here