பாரத தேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டி இருந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களுடன் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதியான முகமது அமீர் ஊடுருவினார். நம் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற சதித் திட்டங்களை தீட்டி இருந்த அமீர், ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.
இவரின் மூன்று கூட்டாளிகளும் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின், 2018ம் ஆண்டு அமீருக்கு எதிராக என்.ஐ.ஏ., எனப்படும் தேசியபுலனாய்வுப் பிரிவினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம், குற்றவாளியான அமீருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.