அனைவருக்குமான அரசு இது என கூறிக்கொண்டே, வெள்ளி, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களை மூடி ஹிந்துக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது தி.மு.க அரசு. இதனால் ஹிந்துக்கள் தங்கள் நித்திய இறைவழிபாட்டை செய்யவும், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவும் முடியாமல் தவிக்கின்றனர். பூ, பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜைப்பொருள் விற்பனையாளர்கள் உட்பட பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், இதே காலகட்டத்தில் மாற்றுமத வழிபாட்டுத் தலங்கள் அரசின் மறைமுக ஆதரவோடு செயல்பட்டு வருகின்றன.
பேருந்துகள், ரயில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் பயணித்துக் கொண்டுதான் உள்ளது. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்படுகின்றன. அனைத்திற்கும் முன்பாக தமிழக அரசு திறந்துவைத்த டாஸ்மாக் மதுபான விற்பனையும் செழிப்பாக நடந்துகொண்டுதான் உள்ளது. இதில் எங்குமே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவது இல்லை. இங்கெல்லாம் பரவாத கொரோனா, கோயில்கள் திறந்தால் மட்டும் பரவும் என்று கூறுவது தி.மு.கவின் ஹிந்துக்களை வஞ்சிக்கும் சதி செயல் என்றே பொதுமக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாளய அமாவாசை தினத்தன்று ஏராளமான ஹிந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவில்கள், நீர்நிலைகளுக்கு வருவது வழக்கம். ஆனால், தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, மகாளய அமாவாசையையொட்டி மக்கள் கூடும் பல்வேறு முக்கிய கோயில்களான பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மருதமலை முருகன் கோயில், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில்கள் உட்பட பல்வேறு கோயில்களில் கொரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்து உள்ளது.