கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் பாறை கோவில் மற்றும் வள்ளுவர் சிலை அமைய காரணமானவர் ஏக்நாத் ஜி

0
809

கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் பாறை கோவில் மற்றும் வள்ளுவர் சிலை அமைய காரணமானவர் ஏக்நாத் ஜி


ஹிந்துத்துவ சித்தாந்தத்திற்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டவர்களையும் கூட அரவணைத்து, அவர்களையும் தேசியப் பணியில் ஈடுபடுத்தி சாதித்துக் காட்டிய உத்தம ஸ்வயம்சேவகர் ஶ்ரீ ஏக்நாத் ரானடே.

1925ல் நாகபுரியில் டாக்டர் ஹெட்கேவார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை (RSS) ஆரம்பித்தபோது அவர் நடத்திய முதல் ஷாகாவில் ஸ்வயம்சேவகனாக தன்னை இணைத்துக் கொண்டவர் ரகுநாத் ரானடே. அவரது கடைசித் தம்பி ஏக்நாத் ரானடே.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவரை அண்ணன் ரகுநாத்தும் அண்ணியும் வளர்த்தனர். அண்ணன் வழியில் தம்பி ஏக்நாத்தும் தன்னை RSSல் 1926ம் ஆண்டு இணைத்துக் கொண்டார். இதே காலகட்டத்தில் தான் யாதவராவ் ஜோஷியும் சங்கத்துக்கு வந்தார். டாக்டர்ஜியின் அரவணைப்பில், மேற்பார்வையில் வளர்ந்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சங்கத்தின் முழுநேர ஊழியராக (பிரசாரக்) வந்தார். 1938ல் மஹா கோசலுக்கு (மத்திய பிரதேசம்) பிராந்த பிரசாரக்காக வந்தார்.
வங்கம், ஒடிசா, அஸ்ஸாம் க்ஷேத்ர பிரசாரக்காக 1950ல் உயர்ந்தார். அப்போது வங்கதேச அகதிகளுக்கான புனர் வாழ்விற்கு இயக்கமும் தொடங்கினார்.

1953 முதல் 1956 வரை அகில பாரத பிரசாரக் பிரமுக்காகவும் 1956 முதல் 1962 வரை சர் காரியவாஹ் (அகில இந்திய பொது செயலாளர்) ஆகவும் பொறுப்பில் இருந்தார்.
சங்கத்திற்கு பணமோ, கட்டடமோ கூடாது என்பது சங்கத்தின் இரண்டாவது தலைவர் குருஜி கோல்வல்கரின் கொள்கை. ஆனால் குருஜியின் 50ம் ஆண்டு பிறந்த தினத்தின்போது நாடு முழுவதும் குருஜியை விஜயம் செய்யச் சொல்லி, அதனை மையமாக வைத்து சங்கத்திற்கு சுமார் ரூ. 17லட்சம் வசூல் செய்து கொடுத்தார். அப்போது வாங்கப் பட்டதுதான், தற்போதைய நாகபுரி கார்யாலயம். அதை முன்னிட்டு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் தான் பசும்பொன் தேவர் திருமகன் குருஜியுடன் கலந்து கொண்டார்.

1962ல் சங்கத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு கல்கத்தா சென்று 1963 கடைசி வரை இருந்தார். அந்த ஆண்டு தான் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா. அவர் மீது கொண்ட அளவற்ற பக்தியால் சுவாமியின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு Rising Call to Hindu Nation என்ற புத்தகத்தை எழுதி முடித்தார்.
1892, டிசம்பரில் சுவாமி விவேகானந்தர் 3 நாட்கள் தியானம் செய்த கன்னியாகுமரி கடல் பாறையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏக்நாத்ஜிக்கு தோன்றியது. இது தொடர்பாக அப்போதே குமரியில் சங்க பிரசாரக்காக இருந்த வெங்கட்ராமன் (அமரர்), சேஷகிரி (தற்போது நெல்லூரில் உள்ளார்) ஆகியோர் குமரி மாவட்ட அளவிலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக குருஜியை நேரில் சந்தித்து தன் விருப்பத்தை வெளிப் படுத்தினார் ரானடே. அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆசி அளித்து ஊக்கப்படுத்தினார்.

இது தொடர்பாக அப்போதைய மனிதவள மேம்பாடு மற்றும் கலாச்சார துறை அமைச்சர் திரு.ஹுமாயூன் கபீரை ஏதநாத் ரானடே நேரில் சந்தித்துப் பேசினார். ஆனால் இது நடக்காத காரியம் என்று மறுத்து முதல் சந்திப்பிலேயே தட்டிக் கழிக்க முயன்றார் கபீர்.

விடாப்பிடியாக ஏக்நாத்ஜி கேட்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் இருந்தால் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்றார் அவர்.
அப்போது பாரதீய ஜன சங்கத்திற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் எம்.பி.க்கள். ஆயினும் சற்றும் மனம் தளராமல் நாடு முழுவதும் பயணம் செய்து, பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து எடுத்துச் சொல்லி 300க்கும் அதிகமான எம்.பி.க்களிடம் கையெழுத்துப் பெற்று பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட், ஜன சங்கம், திமுக என பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெற்றிருந்தார்.
இதனிடையே நினைவாலய முயற்சியைத் தடுக்க கிறிஸ்தவர்கள் இந்தப் பாறையில் சிலுவையை நட்டனர். அதையும் அகற்றி (அது தனி வீர சரித்திரம்) நினைவு மண்டபம் கட்டப்பட்டது. இதற்காக ஏக்நாத் ரானடே செய்த வேலை பிரமிக்கத்தக்கது.
மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவின் மனைவி கமலா ஜோதிபாசு, அப்போதைய திமுக பொதுச்செயலாளர் அண்ணாதுரை, கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்களை நினைவு மண்டபக் குழுவில் உறுப்பினராக வைத்துக்கொண்டு வேலைகளை செய்தார்.

மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை நேரில் சந்தித்து இது தொடர்பாக உதவி கோரினார். தன் கட்சிக் கொள்கைக்கு எதிராக தான் செயல்பட முடியாது. ஆனாலும் நிச்சயம் உதவுகிறேன் என்று சொல்லி தன் மனைவி கமலா ஜோதிபாசு மூலம் ரூ. 10ஆயிரம் நன்கொடை கொடுத்தார். மேற்கு வங்க அரசு மூலமாகவும் உதவினார்.
கேரள முதல்வராக இருந்த அச்சுத மேனனும் உதவினார்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்ட பின் அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக முதல்வர் மு.கருணாநிதி உட்பட பல்வேறு தலைவர்கள் அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
”If Eaknathji ji Sangh, I have no issues with Sangh”என்று இந்திரா காந்தியால் புகழப்படும் அளவுக்கு ஏக்நாத்ஜி செயல்பட்டார்.
ஏக்நாத்ஜி ஒரு அஜாதசத்ரு என்று முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலம் தன்னை நேரில் சந்தித்த ஆர்.பி.வி.எஸ்.மணியன்ஜியிடம் சொன்னார்.
அருணாசலப்பிரதேசம் பாரதத்தின் அங்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக சங்கத்தின் உதவியை இந்திரா காந்தி நாடினார். அதற்குப் பாலமாக இருந்தவர் ஏக்நாத்ஜி.
ஏக்நாத்ஜி விவேகானந்த கேந்திரத்தின் பொதுச்செயலாளராகச் செயல்பட்டபோது ஆர்.பி.வி.எஸ்.மணியன் அமைப்புச் செயலாளராக இருந்தார். பின்னர் ஏக்நாத்ஜி தலைவரான பின், மணியன் பொதுச்செயலாளராகவும் இணைந்து செயல்பட்டார்.
அவர் எழுதிய புத்தகம் ‘ஊருக்கு உழைத்திடல் யோகம்’ என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. அதனைப் படிக்கும் யாருக்கும் சமுதாய, தேசியப் பணியில் அழற்சி என்பதே ஏற்படாது.
விவேகானந்தர் பாறைக்கு அருகிலுள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு பிரமாண்டமான சிலை அமைக்க காரணமாக இருந்தவரும் ஏக்நாத்ஜி தான். அவரது முயற்சியால் 1979ல் அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
பொது வாழ்க்கையை ஒரு வேள்வியாக நினைத்து வாழ்ந்த ஏக்நாத் ஜி 1982ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
1980ம் ஆண்டு குமரி விவேகானந்த கேந்திரா அறையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு விழுந்தார். திருவனந்தபுரம் சித்திரைத் திருநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தில்லி சென்றார்.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் கோமாவில் இருந்தவர் பின்னர் சுயநினைவு பெற்றார். பின்னர் 1981ம் ஆண்டு மீண்டும் சமுதயா வேலைக்காக சுற்றுப் பிரயாணம் மேற்கொண்டார். 1982ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று சென்னை திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. கன்னியாகுமரியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
ஹிந்துத்துவ சித்தாந்தத்திற்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டவர்களையும் கூட அரவணைத்து, அவர்களையும் தேசியப் பணியில் ஈடுபடுத்தி சாதித்துக் காட்டிய உத்தம ஸ்வயம்சேவகர் ஶ்ரீ ஏக்நாத் ரானடே.
அவர் பிறந்த தினம் (19.11.1914).

நந்திஹனுமன
nanthihanuman@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here