அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் (ஏஏபி) 800 க்கும் மேற்பட்ட சிறிய குளங்கள் விடப்பட்டுள்ளன என்று ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.. பவானி ஆற்றில் இருந்து உபரி நீரை உறிஞ்சி, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு திருப்பி விடுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். 1,800 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இது பல நீர்நிலைகளுக்கு தண்ணீரை அனுப்ப உதவும்.
அத்திக்கடவு அவிநாசி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.சுப்ரமணியம் கூறியதாவது: ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல தசாப்த கால கோரிக்கைக்கு பிறகு முந்தைய அரசு இத்திட்டத்தை துவக்கியது. ஆனால், பல சிறிய குளங்கள் திட்டத்தில் இணைக்கப்படாததால், கிராம மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். உதாரணமாக, துலுக்கமுத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய குளமும் (50 ஏக்கர்), மேற்குபதி கிராமத்தில் (100 ஏக்கர்) உள்ள பெரிய குளமும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இவை இரண்டிற்கும் இடையே உள்ள ஏழு சிறிய குளங்கள் இணைக்கப்படவில்லை. துலுக்காமுத்தூரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெரவள்ளூர் கிராமம் இணைக்கப்படவில்லை. முழு கிராமமும் திட்டத்தில் இருந்து விடுபட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.