எம். எஸ். உதயமூர்த்தி என்னும் மயிலாடுதுறை சி. உதயமூர்த்தி தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார்.
பிறப்பு
இவர் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் கிராமத்தில் பிறந்தார்.
கல்வி
மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பை முடித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேதியியலில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வேதியியலில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணி
சீர்காழி சபாநாயகர் உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கும்பகோணம் கல்லூரியிலும் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் வேதியியல் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் செனாரியோ கல்லூரி, மின்னசோட்டா, ஐடகோ பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்னர் விஸ்கான்சினில் உள்ள உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாகியாக நான்காண்டுகள் பணியாற்றினார்.
தொழில்முனைவு
1982ஆம் ஆண்டில் பார்க்கிளே கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். அதனை 1987ஆம் ஆண்டில் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்பினார்.
மக்கள் சக்தி இயக்கத்தை துவங்குதல்
1988-ஆம் ஆண்டு மே. 29-ஆம் நாள் மக்கள் சக்தி இயக்கதை துவக்கினார். மக்கள் சக்தியை இயக்கமாக்கிய வரலாற்றுப் பெருமை டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களையே சாரும். சுயவளர்ச்சி, சுயபொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய ஈடுபாடு என்ற லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இது எனது கிராமம், எனது நாடு என்ற உணர்வோடு நேர்மையான வழியில் கடமை உணர்வோடு ஒவ்வொருவரும் ஆக்க பூர்வமான மனமாற்றத்திற்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக, பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் சக்தி இயக்கம் இருபத்தைந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நல்லவர்களே ஒன்று சேருங்கள்! இது நம்மால் முடியும்! என்ற முழக்கமே மக்கள் சக்தி இயக்கத்தை இயக்கி வருகிறது.
இந்திய நதிகளை இணைக்கும் பெரிய திட்டத்தையும் முதற்கட்டமாக தென்னக நதிகளை இணைக்கும் கருத்தையும் பரப்ப, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க பல முயற்சிகளை மக்கள் சக்தி இயக்கம் எடுத்துள்ளது.
- மக்களிடையே நதிகள் இணைப்பின் முக்கயத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் 1991-ஆம் ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை 1030 கி.மீ டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி தலைமையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 1995-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் நாள் சென்னையில், “நதிகள் இணையும் புதிய இந்தியா” எனற தலைப்பில் மாபெரும் மாநாட்டை மக்கள் சக்தி இயக்கம் நடத்தியது.
- தமிழ் நாட்டின் நீர் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியாக மேற்கு கடலில் வீணாக கலக்கும் நீரை தமிழகம் திருப்ப கோரி, 1992-ஆம் ஆண்டு நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை நடைப்பயணம் நடத்தப்பட்டது.
- 1993-ல் பாண்டியாறு – புன்னம்புழா நதிநீர் இணைப்பு கோரி, ஈரோட்டிலிருந்து கோவை வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
- 1994-ல் பாலாறு – வீராணம் இணைப்பு கோரி வேலூரிலிருந்து சிதம்பரம்; வரை நடைப்பயணம் நடத்தப்பட்டது.
- 1998-இல் அத்திக்கடவு – அவினாசி வெள்ளக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி டாக்டர். உதயமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னிமலையிலிருந்து வெள்ளியங்காடு வரை ஊர்தி பரப்புரை மேற்கொள்ளப் பட்டது. ஆக தமிழக நதி நீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக 2500 கிலோ மீட்டர் நடைப்பயணத்தை இயக்கம் மேற்கொண்டுள்ளது.
டாக்டர். உதயமூர்த்தி அவர்களுடைய சமுதாயப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் நடிகர் கமலஹாசன் அவர்களை கதாநாயகனாக வைத்து ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற திரைப்படத்தை எடுத்தார். இது தமிழக இளைஞர்களிடத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்ற, கூற்றின்படி கிராம முன்னேற்றத்திற்காக ‘கிராம மறுமலர்ச்சி’ என்ற திட்டத்தை இயக்கம் அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அந்த கிராமங்களில் பொருளாதார முன்னேற்றம், மது விலக்கு, லஞ்ச ஒழிப்பு, சுற்றுச் சூழல் போன்ற துறைகளில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இளைஞர்கள்தான் நாட்டின் முக்கியசக்தி, சொத்து என்ற அடிப்படையில் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் கல்வி, சுயதொழில், ஊரக, அரசாங்க செயல்பாடுகள் போன்;றவற்றில் பயிற்சிகள் இயக்கத்தால் அளிக்கப்படுகின்றன. இதனால் கிராமப்புற இளஞைர்கள் இது என்னால் முடியும் என்ற உணர்வோடு தன்னம்பிக்கை பெற்று சுய தொழில்களைச் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகும்.
இவர் எழுதிய நூல்கள்
1.மனம் பிரார்த்தனை மந்திரம்
2.தலைவன் ஒரு சிந்தனை
3.உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்
4.பிரச்சனைகளுக்கு முடிவு காண்பது எப்படி?
5.ஆத்ம தரிசனம்
6.தட்டுங்கள் திறக்கப்படும்
7.நாடு எங்கே செல்கிறது?
8.நீதான் தம்பி முதலமைச்சர்
9.சிந்தனை தொழில் செல்வம்
10.மனித உறவுகள்
11.நெஞ்சமே அஞ்சாதே நீ
12.தன்னம்பிக்கையும் உயர்தர்ம நெறிகளும்
13.ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்
14.வெற்றிக்கு முதற்படி
15.உலகால் அறியப்படாத ரகசியம்
16.சாதனைக்கோர் பாதை
17.சொந்தக் காலில் நில்
18.வெற்றி மனோபாவம
19.எண்ணங்கள்
விருதுகள்
கொழும்பில் உள்ள கம்பன் கழகம் இவருக்கு 2003 ஆண்டு கம்பன் புகழ் விருது வழங்கி கௌரவித்துள்ளது.