லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar; 28 செப்டம்பர் 1929 – 6 பிப்ரவரி 2022)
லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar; 28 செப்டம்பர் 1929 – 6 பெப்ரவரி 2022) இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இசைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பானது இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்றது.[9]
குறிப்பாக இந்தி, வங்காள, மராத்தி மொழிகள் உட்பட முப்பத்தாறுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் பல பாராட்டுகளையும் மரியாதைகளையும் பெற்றார். 1987-இல் இந்திய அரசால் தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில், நாட்டிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்தியாவின் உயரிய குடிமக்களுக்கான விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. எம். எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பெண் பாடகி இவர். 2007 ஆம் ஆண்டில், பிரான்ஸ் தனது உயரிய குடிமக்கள் விருதான, செவாலியே விருதை அவருக்கு வழங்கியது. லதா மங்கேசுக்கர் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், 15 வங்காளத் திரைப்படப் பத்திரிகையாளர் சங்க விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள், இரண்டு பிலிம்பேர் சிறப்பு விருதுகள், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1974 இல், இலண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
ஆரம்ப வாழ்க்கை
ஹேமா என்ற இயற்பெயரைக் கொண்ட லதா மங்கேஷ்கர் 1929 இல் மராத்தியப் பிராமணக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். தந்தை தீனநாத் மங்கேசுகர், மராத்திய, கொங்கணி இசைக்கலைஞர் ஆவார். இவர் செவ்வியல் பாடகரும் நாடக நடிகரும் ஆவார். தாய் செவந்தி (சுதாமதி) மத்தியப் பிரதேசம் இந்தோரைச் சேர்ந்த குசராத்தியப் பெண் ஆவார். இவர் தீனநாத்தின் இரண்டாவது மனைவி ஆவார். முதலாவது மனைவி நர்மதா இறந்த பின்னர் அவர் நர்மதாவின் இளைய சகோதரி செவந்தியைத் திருமணம் புரிந்தார்.
லதாவின் தந்தை-வழிப் பாட்டனார் கோவாவில் உள்ள மங்கேசி கோயில் பூசாரி ஆவார்.[15] லதாவின் தாய்-வழிப் பாட்டனார் குசராத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஆவார். லதா குஜராத்தி நாட்டுப் பாடல்களான பாவாகத்தின் கர்பா போன்றவற்றை தாய்-வழிப் பாட்டியிடம் இருந்து கற்றுக் கொண்டார்.
தீனநாத் கோவாவில் உள்ள மங்கேசி என்ற தனது பிறந்த ஊரின் நினைவாகத் தனது குடும்பப் பெயரை மங்கேஷ்கர் என மாற்றிக் கொண்டார். லதாவின் இயற்பெயர் “ஹேமா”, தந்தையின் நாடகம் ஒன்றில் நடித்த “லத்திக்கா” என்ற பெண் பாத்திரத்தின் நினைவாக இவரது பெயரை லதா என மாற்றிக் கொண்டார். லதாவின் குடும்பத்தில் இவரே மூத்தவர். அவருக்குப் பின் பிறந்த மீனா, ஆஷா, உஷா, இருதயநாத் ஆகிய நால்வரும் புகழ் பெற்ற பாடகர்களும், இசைக்கலைஞர்களும் ஆவர். தனது ஐந்தாவது அகவையில் லதா தந்தையின் மராத்திய மொழியில் மேடையேற்றப்பட்ட இசை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் திருமணம் செய்யாமலே வாழ்ந்தார்.
கலையுலக வாழ்க்கை
முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது.
1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களின் இசையில் பாடியுள்ளார்.
விருதுகள்
• மூன்று தேசிய திரைப்பட விருதுகள்
• 15 வங்காளத்திரைப்படவிருதுகள்
• திரைப்பட பத்திரிக்கையாளர் சங்க விருதுகள்
• நான்கு பிலிம்பேர் விருதுகள்
• இரண்டு பிலிம்பேர் விருதுகள்
• வாழ்நாள் சாதனையாளர் விருது
• பாரத ரத்னா – 2001
• தாதாசாஹெப் பால்கே விருது – 1989
• பத்ம விபூஷண் – 1999
• பத்ம பூஷண் – 1969
1974 இல், இலண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இவர் பாடியுள்ள பாடல்களில் சில
இவர் 30000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவற்றுள் சில.
• வந்தே மாதரம்
• வளையோசை – சத்யா 1988 ‘சஜா’ (1951), ‘பைஜு பவ்ரா’ (1952), ‘ஆக் ஆஹ்’ (1953), ‘ஸ்ரீ 420’ (1955), ‘தேவதாஸ்’ (1955), ‘கதவு எண் 44’ (1955), ‘சோரி சோரி’ (1956), ‘முகல் ஆஸம்’ (1960), ‘கோஹினூர்’ (1960), ‘சோடே நவாப்’ (1961), ‘பரஸ்மணி’ (1963), ‘பூத் பங்களா’ (1965), ‘பட்னி பட்னி’ (1966), ‘அபிலாஷா’ (1969), ‘ கேரவன்’ (1971), ‘காதி பதங்’ (1971), ‘ அமர் பிரேம்’ (1972), ‘ஆன்ந்தி’ (1975), ‘சாந்தினி’ (1989), ‘லம்ஹே’ (1991), ‘தர்’ (1993), ‘யேஹ் தில்லகி’ (1994), ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (1995), ‘ஹை தலாக் தில்’ (1997), ‘மொகபத்தீன்’ (2000), ‘முஜ்சே ரோஸ்ட்டி கரோகே’ (2002), ‘சாரா’ (2004), ‘தில் சே’ (1998), ‘ஒன் 2 க 4 ‘ (2001), ‘புகார்’ (2000), ‘ஜுபைதா’ (2001), ‘ரங் தே பசந்தி (2006), ‘லகான்’ (2001), ‘அனார்கலி’, ‘அல்பேலா’, ‘ஆஷா’, ‘அடாலட்’, ‘ரயில் மேடை’, ‘சாச்சா ஜிந்தாபாத்’ போன்ற திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் பலரையும் கவர்ந்தது எனலாம்.