ரூ.10 கோடி லஞ்சம் பஞ்சாப் முதல்வர் மருமகன் ஒப்புதல்

0
169

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங், மணல் குவாரி நடத்துவோரிடம் இருந்தும், பணியிட மாற்றத்திற்கு அதிகாரிகளிடம் இருந்தும், 10 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றது அம்பலமாகி உள்ளது.பஞ்சாபில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் 20ம் தேதி, ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் சட்ட விரோதமாக மணல் குவாரிகளை நடத்தி வருவோர் மீது அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பாக, கடந்த ஜனவரி 18ம் தேதி, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங்கிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், 8 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
அவரின் கூட்டாளியான சந்தீப் குமார் என்பவரிடம் இருந்து, 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுந்து, கடந்த 3ம் தேதி, பூபிந்தர் சிங்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி ரூபாயும், பூபிந்தர் சிங்குக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
மணல் குவாரி நடத்துவோரிடம் இருந்தும், மாநிலத்தில் பணியிட மாற்றம் பெற்றுத் தருவதாக கூறி அதிகாரிகள் சிலரிடம் இருந்தும், இந்த 10 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பூபிந்தர் சிங் அளித்த வாக்குமூலத்தை, அமலாக்கத் துறையினர் பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here