மணல் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாதிரியாரை வி.ஐ.பி.,க்கள் சந்திப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது.அதில், 2019 நவ., முதல், கேரள மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ், எம் சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார்.
எம் சாண்ட் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி, அங்கிருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டது.இது குறித்து ஐகோர்ட் உத்தரவின் படி, போலீசார், பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர. இந்நிலையில் பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ், 69, மற்றும் ஐந்து பாதிரியார்களை சிபிசிஐடி போலிசார் கைது செய்தனர். இவர்களில் பிஷப் சாமுவேல் மார் இரோனஸ், பாதிரியார் ஜோஸ் ஜாம காலா 69, ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி முறையிட்ட ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிஷப் மற்றும் பாதிரியாரை சந்திக்க, தினமும் வி.ஐ.பி.,க்கள் வரிசைகட்டி வந்தபடி உள்ளனர். நாங்குநேரி காங்., – எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், கத்தோலிக்க சபை கன்னியாஸ்திரிகள், அவர்களை சந்தித்தனர்.நேற்றும், நீதிமன்றம், போலீஸ் அனுமதியின்றி, அரசு மருத்துவமனையில் அவர்களை வி.ஐ.பி.,க்கள் பலர் சந்தித்து பேசினர். இது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகளில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை.