சுயசார்பு பாரதம் உருவாகஅவசியம்:வேலைவாய்ப்பு அதிகரிக்க,ஆர்.எஸ்.எஸ் அறைகூவல்

0
446

ஆர்.எஸ்.எஸ் அறைகூவல்
சுயசார்பு பாரதம் உருவாக அவசியம்:
வேலைவாய்ப்பு அதிகரிப்பு
இயற்கை வளம், மனித ஆற்றல், தொழில் முனைவுத் திறமை இவையெல்லாம் நிறைந்துள்ள நம் நாடு, விவசாயம், உற்பத்தித் துறை, சேவைத் துறைகளில், எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை முற்றிலுமாக உயர்த்தும் வல்லமை கொண்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்படுத்திய வேலையிழைப்பு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையில், முளைத்த புதிய வாய்ப்புகளால் சில பிரிவினர் ஆதாயம் பெற்றதையும் பார்த்தோம். அந்த வேலைவாய்ப்பு சாத்தியங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு சவாலை எதிர்கொள்ள முழு சமுதாயமும் முனைந்திட வேண்டும் என அகில பாரத பிரதிநிதி சபை விரும்புகிறது.
மனித உழைப்பு, அதிகம் பேருக்கு வேலை, சூழல் சிநேகிதம், பரவலாக்கம், பலனை சீராகப் பங்கிடுவது என்று பொருளாதாரத்தில் பாரதிய பாணி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பிரதிநிதி சபை கருதுகிறது. ஊரக பொருளாதாரம், சிறு குறு தொழில்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள் இவை பாரதிய பாணியினால் பலன் அடையும். ஊரக மக்களின் பணித் தகுதி, முறைசாரா துறைகளில் வேலைவாய்ப்பு, மகளிருக்கு வேலைவாய்ப்பு, ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மகளிர் பங்கேற்பு இவற்றுக்கு அதிக ஊட்டம் தர வேண்டும். நமது சமுதாயத்தின் தேவைக்குப் பொருத்தமான புதிய தொழில் நுட்பங்களையும் மென்திறன்களையும் ஏற்றிட முயற்சி செய்வது முக்கியம்.

இது போல வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வெற்றிகரமான முன்மாதிரிகள் பல நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த முன்மாதிரிகள் உள்ளூரின் சிறப்பம்சம், திறமை, தேவை இவற்றை கணக்கில் கொள்கின்றன. பல இடங்களில் தொழில் முனைவோர், சிறு கடன் அளிக்கும் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் , தன்னார்வ அமைப்புகள், பொருட்களின் மதிப்பு கூட்டுவது , கூட்டுறவு துறை , உள்ளூர் உற்பத்திப் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவது, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களில் பல முயற்சிகளை மேற் கொண்டுள்ளனர். இத்தகைய முன்முயற்சிகளின் விளைவாக கைவினைத் தொழில், உணவு பதப்படுத்துதல் தொழில், வீட்டு தயாரிப்பு பொருட்கள், குடும்ப நிறுவனங்கள் ஊக்கம் பெற்றுள்ளன. அவர்களின் அனுபவத்தை கேட்டறிந்து, தேவையான மற்ற பகுதிகளிலும் அதை நடைமுறைப்படுத்த மனப்பூர்வமாக முயற்சி செய்ய வேண்டும்.

சில கல்வி / தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளன. எளிய, அடித்தட்டு மக்களை உள்ளடக்கி சமுதாயத்தின் பெரும்பகுதிக்கு இது போன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளவர்களை பிரதிநிதி சபை பாராட்டுகிறது. சமுதாயத்தில் ’சுதேசி, சுயசார்பு’ குறித்து விழிப்புணர்வூட்டுவதால் இந்த முன்முயற்சிகள் உரிய உத்வேகம் பெறும்.

நமது உற்பத்தித் துறை அதிக வேலை வாய்ப்பு சாத்தியம் கொண்டது.அதை ஊக்குவிப்பது அவசியம். இதனால் இறக்குமதியை நம்பியிருப்பதும் குறையும். வேலை தேடும் மனப்பான்மையிலிருந்து மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் விடுபட, சுயதொழில் நடத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்க வேண்டும். அதே போன்று பெண்கள், கிராம மக்கள், தொலைதூர பழங்குடி மக்கள் மத்தியிலும் சுயதொழில் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். கல்வியாளர்கள், தொழில் துறையினர், சமுதாய பெரியவர்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இதில் திறன் மிக்க பங்களிப்பு வழங்க வேண்டும். அரசாங்கரீதியிலான முயற்சி இவற்றுக்கு இசைவாக அமைய வேண்டும்.

வேகமாக மாறி வரும் சர்வதேச பொருளாதார/ தொழில்நுட்ப சூழலை எதிர்கொள்ள, அதற்கேற்ற வழிகளை சமுதாயம் கண்டறிய வேண்டும் என்று பிரதிநிதி சபை கருதுகிறது. வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பு, தொழில்முனைவு வாய்ப்பு, ஏற்றுமதி சாத்தியங்கள் இவை குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும். வேலைக்கு முன்பும், வேலையின் போதும் பணிப் பயிற்சியளிப்பது, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிப்பது போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நம் நாட்டை மையப்படுத்திய வேலை வாய்ப்புகளை உருவாக்குமாறு மக்களை பிரதிநிதி சபை கேட்டுக் கொள்கிறது; அதுதான் பொருளாதரத்தை பலப்படுத்தும்; அனைவருக்குமான நிலைத்த வளர்ச்சியை சாத்தியமாக்கும். சமுதாயத்தில் அனைவரும் என்றும் அழியாத நமது பண்புகளை மையப்படுத்தி ஆரோக்கியமான பணிக் கலாச்சாரம் நிறுவிட வேண்டும் அதன் வாயிலாக அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உலக பொருளாதாரத்தில் தனக்கே உரிய உன்னத இடத்தை பாரதம் நிலைநிறுத்திக் கொள்ள வழி வகை செய்ய வேண்டும் என்று அகில பாரதிய பிரதிநிதி சபை வலியுறுத்துகிறது.
(மார்ச் 11,12,13 ல் குஜராத் கர்ணாவதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வாசகம்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here