மத்திய அரசு, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கியமாக, ராணுவ சாதனங்கள், தளவாடங்களை, உள்நாட்டு நிறுவனங்களிடம் அதிக அளவில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த நிதியாண்டில் ராணுவ பட்ஜெட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், 64 சதவீத அளவிற்கு உள்நாட்டு நிறுவன ஆயுதங்களை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது.இந்த இலக்கை விஞ்சி, 65.50 சதவீதம் வரை உள்நாட்டு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும், ராணுவ சேவைகள் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில், 99.50 சதவீதம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.உலகில் அதிக அளவில் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 9.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.