ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் (ஏப்.,21) பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஒருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் யூசூப் கண்ட்ரோ உள்ளிட்ட இரு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இன்னும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.இந்த நிலையில் இன்று (ஏப்.,22) அதிகாலையில் சஞ்வான் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். நான்கு வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல், அதிகாலையில் சிஐஎஸ்எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார், இருவர் படுகாயம் அடைந்தனர். பஞ்சாயத்து ராஜ் திவாஸ் தினத்தையொட்டி நாளை மறுநாள் (ஏப்.,24), பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு செல்லவிருக்கும் நிலையில் கடந்த இரு நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.