கவியரசுகண்ணதாசன்

0
122

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் ஜூன் 24, 1927ஆம் ஆண்டு பிறந்தவர். இயற்பெயர் முத்தையா. சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு ‘நாராயணன்’ என அழைக்கப்பட்டார். சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் ‘கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்..’என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். ‘கிரகலட்மி’ பத்திரிகையில் வெளியான ‘நிலவொளியிலே’ என்பதுதான் இவரது முதல் கதை.கம்பர், பாரதியாரிடம் ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். ‘கண்ணதாசன்’ என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார். பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.’பாகப்பிரிவினை’ படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து ‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘படிக்காத மேதை’ உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின. தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார். ‘பராசக்தி’, ‘ரத்தத் திலகம்’, ‘கருப்புப் பணம்’, ‘சூரியகாந்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.மேலே யாரோ எழுதிவைத்ததை கடகடவென்று படிப்பதுபோல அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டுமாம்! ‘பாண்டமாதேவி’ உள்ளிட்ட காப்பியங்கள், பல தொகுதிகளாக வெளிவந்த ‘கண்ணதாசன் கவிதைகள்’, ‘அம்பிகை அழகு தரிசனம்’ உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் படைத்தார்.கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, ‘வன வாசம்’ என்பது உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார்.இவரது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ 10 பாகங்களாக வெளிவந்தது. ‘சேரமான் காதலி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். ‘குழந்தைக் காக’ திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.ஆழமான, புதிரான வாழ்வியல் கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன், உடல்நலக் குறைவு காரணமாக 54-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

#சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here