பாகிஸ்தான் – இந்தியப் பிரிவினை – நூல் அறிமுகம்

0
405

இந்தப் புத்தகத்தில் பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது தொடர்பாக இந்துத் தரப்பு, முஸ்லிம் தரப்பு என இரண்டுக்குமான வாதங்களை மிக விரிவாக, மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார். மிகச் சிறந்த வழக்கறிஞர் என்பதால் இந்துக்கள் தரப்பு நியாயங்களாக டாக்டர் அம்பேத்கர் பட்டியலிட்டிருப்பதைப் படிக்கும்போது பாகிஸ்தான் என்ற தேசம் பிரிக்கப்படக் கூடாது என்று தோன்றும்; பாகிஸ்தான் தரப்பு ‘நியாயங்களாக’ அவர் சொல்லியிருப்பவற்றைப் பார்க்கும்போது பிரிப்பதுதான் சரி என்று தோன்றும்.

சந்திர குப்த மௌரியர் ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதிகள் இந்தியாவின் அங்கமாகத்தான் இருந்திருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் இந்தியாவுக்கு வந்தபோதும் இந்தப் பகுதிகள் இந்தியாவின் அங்கமாகவே இருந்திருக்கின்றன என்றெல்லாம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

கி.பி. 711-ல் முஹம்மது பின் காசிம் தொடங்கி 1761-ல் அஹமத் ஷா அப்தாலி வரை படையெடுத்து வந்து அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தப் படையெடுப்பு நடந்த காலத்தில் நடந்த வன்முறைகளை மிகுந்த வேதனையுடன் விரிவாகப் பட்டியலிட்டுவிட்டு பாகிஸ்தானாக உருவாகப் போகும் அந்த வட இந்தியப் பகுதியானது முழுக்க முழுக்க இஸ்லாமியமயமாகிவிட்டது. பிரிவினை நடக்கவேண்டுமென்ற அவசியமே இல்லை. அது பிரிந்துதான் இருக்கிறது என்று அவர் சொல்லும்போது யார்தான் மறுத்துச் சொல்ல முடியும்?

அதைவிட அடுத்ததாக அவர் கேட்கும் கேள்வி மிகவும் முக்கியமானது. ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு வலிமையான, விசுவாசமான ராணுவம் அவசியம். பாகிஸ்தான் என்று தனி நாடு பிரித்துக் கொடுக்காவிட்டால், ஆஃப்கானில் இருந்து இஸ்லாமியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தால், இந்திய ராணுவத்தில் இருக்கும் முஸ்லிம் வீரர்கள் இந்தியாவுக்காகப் போரிடுவார்களா… இஸ்லாமியப் படைகளுடன் கை கோர்ப்பார்களா?

தனி நாடு கேட்டும் தராமல் வலுக்கட்டாயமாக அவர்களைப் பிடித்து வைத்தால் ஆட்சி நிர்வாகம் நல்லபடியாக நடக்குமா என்று கேள்வி எழுப்பிவிட்டு, அவர்கள் பக்கம் எந்த நியாயமும் இல்லாவிட்டாலும் தனி நாடு கேட்டால் கொடுத்துவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு வருகிறார்.

ஹிந்துக்கள் தரப்பு நியாயமாக அவர் என்ன சொல்கிறாரென்றால், ஹிந்து ராஜ்ஜியத்தில் வாழ முடியாது என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எண்ணமா? வெறும் அரசியல் தரப்பின் எதிர்ப்புதானா? ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அப்படி நினைக்கிறார்கள் என்று சொன்னால் அது ஒரு விசித்திரமான மனோபாவம் என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள், சுதந்தரமான ஹிந்து அரசர்களின் சமஸ்தானங்களில் ஹிந்து ராஜ்ஜியத்தில்தான் வாழ்ந்து வருகிறார்கள். முஸ்லிம்களோ முஸ்லிம் லீகோ அது தொடர்பாக எந்த எதிர்ப்பையும் இதுவரை எழுப்பியதில்லையே என்று கேள்வி எழுப்புகிறார்.

இன்று அம்பேத்கரின் ஜனநாயக, சமத்துவ அரசியல் சாசனத்தின் மூலம் இடைநிலை, கடைநிலை ஜாதிகளின் செல்வாக்கே இந்திய அரசியல் புலத்தில் வலிமையுடன் திகழ்கிறதென்பது வேறு விஷயம். ஆனால் அன்று அப்படி இல்லை.

தீண்டப்படாதவர்களுக்கு எந்தவொரு அரசியல் சலுகையையும் தருவதற்கு எதிர்ப்புக் காட்டும் திரு. காந்தி, இஸ்லாமியர்களுக்கு மட்டும் வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்துப்போட்டுக் கொடுக்கத் தயாராகத்தானே இருக்கிறார்? சூத்திரர்கள், தீண்டப்படாதவர்களுடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதைவிட இஸ்லாமியர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராகவே அவர்கள் இருக்கிறார்கள். எனவே, ஹிந்து சமூகத்தின் ஜனநாயகத் தன்மை பற்றிப் புகார் சொல்லும் தார்மிக உரிமை முஸ்லிம்களுக்கு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது என்று சொல்லி, தனி நாடு கோரிக்கை அவசியமே இல்லை என்கிறார்.

சிறுபான்மை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு கனடாவிலும் சிறுபான்மை ஆங்கிலேயர்களுக்கு தென் ஆஃப்ரிக்காவிலும் சிறுபான்மை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கும் இத்தாலியர்களுக்கும் ஸ்விட்சர்லாந்திலும் கிடைத்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைவிடக் கூடுதலாக பிரிட்டிஷ் இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உரிமைகளும் அதிகாரங்களும் தரப்பட்டிருக்கின்றன என்பதுதானே உண்மை? சிறுபான்மை என்பதால் ஒடுக்கப்படுகிறார்கள் என்று முஸ்லிம்கள் சொல்வதில் எந்த நியாயமும் இல்லையே என்று இன்னொரு இடத்தில் கேட்கிறார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் ஹிந்து ராஜ் வர வாய்ப்பே இல்லை என்பதால், பாகிஸ்தான் என்ற தேசம் அவர்களுக்கு அவசியமே இல்லை. அவர்கள் சிறுபான்மையாக இருக்கும் இடங்களில் நிலைமை மேலும் மோசம். ஏனென்றால் பாகிஸ்தான் உருவானாலும் உருவாகாவிட்டாலும் அவர்கள் ஹிந்து ராஜின் கீழ்தான் இருந்தாகவேண்டியிருக்கும். முஸ்லிம் லீகின் இந்த அரசியலைப் போல் தேவையற்ற ஒன்று இந்த உலகில் வேறு ஏதேனும் இருக்கமுடியுமா என்று கேட்கும் கேள்விக்கு ஜின்னாவிடம் என்ன பதில் இருந்திருக்கும்?

பிரிவினை தொடர்பான விவாதங்களில் இந்தப் புத்தகத்தை காந்தியும் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். ஜின்னாவும் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். இதிலிருந்தே இந்த நூல் எந்த அளவுக்கு ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் என்பது, முற்றிலும் வேறொன்றில் இருக்கிறது. இந்துத் தரப்பு வாதங்கள், இஸ்லாமியத் தரப்பு வாதங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிவிட்டு, கடைசியில் பிரிவினைதான் ஒரே வழி என்ற முடிவையும் முன்வைப்பவர், அந்தப் பிரிவினையை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருப்பவைதான் மிகவும் முக்கியமானவை.

அது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் முன்வைத்திருக்கும் யோசனைகள் எல்லாம் ஒரு மாமேதை, ஒரு தீர்க்கதரிசி சொன்ன ஆலோசனைகளாக இருக்கின்றன. சற்று உணர்ச்சி மேலிடச் சொல்வதென்றால், மாபெரும் ரிஷி கண்டு சொன்ன வேத வாக்கியங்கள் போல் இருக்கின்றன.

உலகின் ஏதாவது ஒரு சரித்திர நிகழ்வை மாற்றியமைக்க இறைவன் வாய்ப்புக் கொடுத்தால், இந்தியப் பிரிவினையை டாக்டர் அம்பேத்கர் சொல்லியிருக்கும் வழியில் செய்துகாட்ட வேண்டும் என்றே ஒட்டுமொத்த உலகமும் ஒரே குரலில் சொல்லும்.

மிகவும் அடிப்படையான விஷயங்களைத்தான் அவர் பேசியிருக்கிறார். அன்று அதைக்கூட யாரும் பேசவில்லை என்பதுதான் நம் மாபெரும் துரதிஷ்டம்.

ஏதோ முஸ்லிம் லீக் தனி நாடு வேண்டும் என்று கேட்பதால் எடுத்துக் கொடுத்துவிடக் கூடாது. அந்தப் பகுதியில் வாழும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அவர்கள் இந்துஸ்தானிலேயே இருக்க விரும்பினால் பிரிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்கிறார்.

ஜின்னாவோ மக்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கப் பயந்து, பிரிட்டிஷாரே பிரித்துக் கொடுத்து விடட்டும் என்று சொல்கிறார். அதுவே நடக்கவும் செய்தது.

”கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற ஒன்றை உருவாக்கவேண்டும். பாகிஸ்தான், இந்துஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் ஒத்திசைவான அரசியல் சாசனத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பத்து ஆண்டுகள் பொதுவான அரசாங்கம் ஒன்றின் கீழ் இருந்து, ஹிந்துக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டு அதன் பின் முஸ்லிம்கள் முடிவெடுக்கலாம்…

சிறுபான்மையினர் தங்களை நம்பலாம் என்ற உத்தரவாதத்தைத் தர ஹிந்துக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஹிந்து ராஜ்ஜியம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான முஸ்லிம்களின் பயங்களெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கும் அந்தக் கால அவகாசம் உதவும்….

இதில் இன்னொரு சாத்தியக்கூறும் இருக்கிறது. பாகிஸ்தான் என்றொரு தனி நாட்டைக் கேட்டு வாங்கிச் சென்ற பின்னர் சில காலம் கழித்து பாகிஸ்தான் அரசின் மூலம் அதிருப்தியுற்று மீண்டும் ஹிந்துஸ்தானுடன் சேர்ந்து ஒரே அரசியல் சாசனத்தின் கீழ் இணைந்து வாழ விரும்பவும் கூடும்….

பாகிஸ்தான் என்ற தனி நாடு எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை முஸ்லிம்கள் பெற வேண்டும்; அதன் பின்னர் இந்தியாவுடன் இணைந்தால் அந்த இணைப்பு மிகவும் வலிமையானதாக, நீடித்து இருப்பதாக இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.

பாகிஸ்தான் என்ற நாடு பிரிக்கப்படும்போது அந்தப் பிரிவினையானது முழுமையானதாக, முற்றிலும் துண்டாடியதாக இருக்கக் கூடாது. பாகிஸ்தானுக்கும் ஹிந்துஸ்தானுக்கும் இடையில் தொடர்புகள் நீடிக்க வேண்டும். பின்னர் சேர்ந்துகொள்ள முடியாமல் போகும்படியான தடைகள், பிளவுகள் எதுவும் இருக்கக் கூடாது. அதனால்தான் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற ஒன்றை முதல் கட்டச் சட்டத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது ஒரு வாய்ப்பு பாகிஸ்தானிய மக்களுக்குத் தந்தால் ராணுவ ஆட்சியை அனுபவிக்கும் அந்த மக்கள் நிச்சயம் இந்துஸ்தானுடன் மீண்டும் வந்து சேருகிறேன் என்றுகூடச் சொல்லக் கூடும்.

பொது அரசாங்கமெல்லாம் வேண்டாம். உடனே இரண்டாகப் பிரிப்பதென்று முடிவு செய்துவிட்டால், முஸ்லிம் பகுதிக்கு பாகிஸ்தான் (மேற்கு பாகிஸ்தான் – கிழக்கு பாகிஸ்தான்] என்று பெயர் சூட்ட வேண்டும். இந்து பகுதிக்கு ஹிந்துஸ்தான் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஹிந்துஸ்தானில் இருந்து 20 பேர்; உருவாகவிருக்கும் பாகிஸ்தானில் இருந்து 20 கொண்ட குழு அமைக்கப்பட்டு எல்லை வரையறை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், பிரிட்டிஷாரோ வரைபடத்தில் ரத்தத்தால் ஒரு கோட்டை வரைந்து அந்தப் பக்கம் பாகிஸ்தான்; இந்தப் பக்கம் இந்தியா என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

இரு நாட்டு மக்களின் இடப்பெயர்ச்சிக்கு ஐந்து ஆண்டு கால அவகாசம் தர வேண்டும். இடம்பெயரும் மக்களுடைய சொத்துக் கணக்கு, சம்பளக் கணக்கு, இடம்பெயர பேருந்து வசதி, காவல் பாதுகாப்பு என அனைத்தையும் செய்து தர வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். (இவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.)

ஐரோப்பியப் போர்களுக்குப் பிறகு கிரேக்கம் பல்கேரியா, துருக்கி கிரேக்கம் நாடுகளுக்கு இடையிலான மக்கள் பரிமாற்றமானது முழு வெற்றி பெற்றிருக்கிறது. உலகின் வேறொரு நாட்டில் கிடைத்த வெற்றி இந்தியாவிலும் கிடைக்க வாய்ப்பு உண்டு என்று ஆதாரபூர்வமாக, அப்பாவியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

பிரிட்டிஷ் அயோக்கியர்களின் கணக்கோ வேறொன்றாக இருந்திருக்கிறது. ‘எங்களை வெளியேறு என்று சொன்னீர்களல்லவா, சாகுங்கள்’ என்று சபித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பாகிஸ்தானென்ற தனி நாட்டைப் பெறுவதைவிட அதைப் பெறும் வழிமுறைக்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டும். பிரிவினைக்குப் பின்னரும் பாகிஸ்தானும் ஹிந்துஸ்தானும் நட்புறவுடன் நல்லுறவைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் அதில்தான் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று மன்றாடியிருக்கிறார் மகாத்மா அம்பேத்கர்.

”ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது பெற்ற வெற்றியாகவும் இன்னொருவருக்கு அவமானகரமானதாகவும் அது இருக்கக் கூடாது. இரு தரப்பினருக்கும் மரியாதை தருவதாகவும் நல்லுறவுடனும் அது நடந்தேற வேண்டும். மக்களின் பொது வாக்கெடுப்பு அல்லாமல் இந்த நல்ல முடிவு கிடைக்க வேறு எந்த வழியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை….

எது மிகச் சிறந்த வழிமுறை என்று நான் என் ஆலோசனையை மிகத் தெளிவாகவே முன்வைத்திருக்கிறேன். பிறர் அவர்களுடைய ஆலோசனைகளை முன்வைக்கலாம். எனது ஆலோசனைதான் மிகவும் சிறந்தது என்று நான் சொல்லவில்லை. எந்தத் தீர்மானமாக இருந்தாலும் நல்லெண்ணம் மற்றும் பொறுப்புணர்வு கொண்டதாக இல்லையென்றால் ஆறாத காயத்தையே ஏற்படுத்தும்” என்று மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன், மிகுந்த நம்பிக்கையுடன், ஒரு வரம் போல் நமக்கு வழி காட்டியிருக்கிறார்.

ஆனால், நல்லோர்களின் வரம் நமக்குக் கிடைத்திருக்கவில்லை. அயோக்கியர்களின் சாபமே நமக்குக் கிடைத்தது. நாம் செய்த தவம் அப்படி.

நடந்து முடிந்த ஒரு பேரழிவை எப்படித் தடுத்திருக்கலாம் என்பதைச் சொல்லும் புத்தகம் மட்டுமேயல்ல. இனி அப்படி ஒன்று நடக்காமல் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதையும் சொல்லித் தருகிறது. இந்த விஷயத்தில் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பவற்றைத் தாண்டி நாம் தெரிந்துகொள்ள எதுவும் இல்லை.

படித்துப் பார்த்தே புரிந்துகொண்டு விடுவோம்.

         –பி.ஆர்.மகாதேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here