அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ‘மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வான ‘கியூட்’ (சி.யு.இ.டி) நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் மோடியை எதிர்ப்பதாகக்கூறி, மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் அதை எதிர்க்கும் விசித்திரமான போக்கு தமிழக அரசிடம் உள்ளது. முதலில் ‘நீட்’ தேர்வு, பிறகு ‘தேசிய கல்விக் கொள்கை’ இப்போது ‘கியூட்’ தேர்வு. அப்போது ஆட்சியில் இருந்து அமல்படுத்திய காங்கிரஸ், தி.மு.கவினரே தற்போது அதை எதிர்ப்பது விந்தையானது. ‘கியூட்’ மிகச்சிறந்த திட்டம். இதற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற அரசுக்கு உரிமையில்லை. மாணவர்கள் பல நுழைவுத்தேர்வுகளை எழுதத் தேவையில்லை என்பது கியூட்டின் மிகப்பெரிய நன்மை. கியூட் வந்தால் தமிழக மாணவர்கள் மத்தியப் பல்கலைக் கழகங்களில் சேர்வது கடினம் என உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி கூறி இருப்பது மாணவர்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. இத்தேர்வை 13 மொழிகளில் எழுதலாம். கியூட் கிராமப்புற மாணவர்களை அதிகம் பாதிக்கும் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பொது நுழைவுத் தேர்வுகளை குறை கூறாமல் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது தமிழக அரசின் கடமை. கல்விக்காகவும் வேலைக்காகவும் வெளியே செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது கியூட் தேர்வு. நாடு முழுவதும் மாணவர்கள் செல்வதை தடுக்க எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லை. தங்கள் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்தை ஆராய்ந்து விரிவுபடுத்தி சிறந்து விளங்க விரும்புவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. பாரதத்தில் ஒரே நாடு, ஒரு மொழி கொள்கை உடனடி சாத்தியமில்ல்லாதது. ஆனால் நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு கல்விதான் முதுகெலும்பு என்பதால், கல்வியில் ஒரு வலுவான ஒருங்கிணைந்த தேசியக் கொள்கையை நாம் கொண்டிருக்க வேண்டும். உலக அளவில் பாரதம் போட்டியிட, நாடு முழுவதும் தேசியக் கொள்கையை அமல்படுத்தி கல்வி முறையில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும். மத்தியப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கவும் தேசிய அளவிலான வேலைவாய்ப்பு பெறவும் இது ஒரு நல்ல வாய்ப்பு’ என தெரிவித்தார்.