கர்நாடக அமைச்சரவை கட்டாய மத மாற்றங்களை கட்டுப்படுத்த மதமாற்றத் தடைச் சட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த வாரம் அவசரச் சட்டத்தை வெளியிட முடிவு செய்தது. அது தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், ‘கர்நாடக சட்டப் பேரவையில் மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா’ நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், சட்ட மேலவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாததால் அது நிலுவையில் உள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் அனைத்து கூறுகளையும் கொண்ட இந்த அவசரச் சட்டம், ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், சட்டப் பேரவையில் மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கப்படும்’ என தெரிவித்துள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ‘இது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. ஆனால் இதன் மூலம் வலுக்கட்டாயமாகவோ அல்லது தூண்டுதலின் பேரிலோ மதமாற்றம் செய்வது தடுக்கப்படும். அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மத உரிமைகளைக் குறைக்கும் வகையில் எதுவும் இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தில் இல்லை. கடந்த காலங்களில் மதமாற்றத் தடை மசோதாவைக் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. எங்கள் அரசு அதை வலுப்படுத்தியது மட்டுமின்றி, கண்டிப்பாக அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. ஏற்கனவே, எட்டு மாநிலங்கள் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றியுள்ளன. இதை செயல்படுத்தும் ஒன்பதாவது மாநிலமாக கர்நாடகம் இருக்கும்’ என்று கூறினார்.