மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தில் உள்ள பரசுராம் குண்ட் பகுதியில் அமைக்கப்படவுள்ள 51 அடி உயர வெண்கல பகவான் பரசுராமர் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த சிலையை விப்ரா அறக்கட்டளை நிறுவுகிறது. மேலும், பரசுராம் குண்ட் தளத்தில் கோயிலை புதுப்பிக்கும்போது நிறுவப்பட்ட 6 அடி பரசுராமர் சிலையையும் திறந்து வைத்தார். அப்போது, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பரசுராம் குண்ட் விரைவில் நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில்கள் மூலம் இணைக்கப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார். இவ்விழாவில் அமித் ஷாவுடன், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, துணை முதல்வர் மற்றும் மாநில அமைச்சர்களும் இந்த பூமி பூஜை விழாவில் பங்கேற்றனர். இந்த பிரமாண்ட சிலையை தயாரிக்கும் பிரபல சிற்பி நரேஷ் குமாவத்தும் விழாவில் பங்கேற்றார். பிறகு அமித்ஷா, நாம்சாய் மாவட்டத்தில் உள்ள கோல்டன் பகோடாவை பார்வையிட்டார்.