சமீப காலமாக விண்வெளி சார்ந்த படிப்புகள் மாணவர்களைப் பெரிதும் ஈர்க்கும் ஒன்றாகவும் மாறியுள்ளன. அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பாரதத்தின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, பள்ளி மாணவர்களுக்காக “விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தின் மேலோட்டம்” என்கிற தலைப்பில் அனைவருக்குமான ஒரு இலவச இணையவழி படிப்பை அறிவித்துள்ளது. டேஹ்ராடூனில் இருக்கும் இஸ்ரோவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிமோட் சென்சிங் (ஐ.ஐ.ஆர்.எஸ்) அமைப்பு இந்த பாடதிட்டத்தை நடத்துகிறது. விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். ஜூன் 06, 2022 முதல் ஜூலை 05, 2022 வரை நடக்கவுள்ள இந்த இணைய வகுப்பில் பாரதத்தின் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர்கள் விண்வெளி தொழில்நுட்பம் குறித்து உரையாற்றுவார்கள். விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களையும், அதன் வீச்சையும் இளம் தலைமுறையினர் புரிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். பாரதத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இருக்கும் பள்ளி மாணவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். இந்த படிப்பில், விண்வெளி தொழில்நுட்பம், இந்திய விண்வெளி திட்டம், விண்கல அமைப்புகள், செயற்கைக்கோள் தொடர்பு, வழிசெலுத்தல் தொழில்நுட்பம், வானியல், விண்வெளி அறிவியல், செயற்கைக்கோள் வானிலை, அதன் பயன்பாடுகள், புவி அறிவியல், ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் என பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு: https://isat.iirs.gov.in/specialcourse/aboutmooc.php என்ற இணையபக்கத்தை அணுகலாம்.