சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர், வரலாற்றாசிரியர், அரசியல் தலைவர், தத்துவவாதி என பன்முகத்திறமைக் கொண்ட சுதந்திர போராட்ட வீரர்தான் விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற வீர சாவர்க்கர்.
ஜாதிய சிந்தனைகள் பலமாக இருந்த அக்காலத்திலேயே, ஜாதி அமைப்புகளை கடுமையாக எதிர்த்தவர் சாவர்க்கர். அனைத்து ஜாதியினரின் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்காக கடுமையாகப் பணியாற்றினார். அவர்களின் பெற்றோருக்கு பண ஊக்கத்தொகை வழங்கவும் வலியுறுத்தினார். தசரா மற்றும் மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகளில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து, பாரம்பரிய இனிப்புகளை அனைவருக்கும் விநியோகிப்பார்.
அவரே ஒரு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தையை வளர்த்தார். பட்டியலின மக்களுக்கு காயத்ரி மந்திரத்தை படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தார். அவர்கள் கோயில்களில் சமஸ்கிருத பாடல்களை ஓதவும், விஷ்ணு சிலைக்கு தங்கள் கைகளால் அபிஷேகம்செய்யவும் சாவர்க்கர் ஊக்குவித்தார்.
ரத்னகிரி சிறை வாழ்க்கையில், சாவர்க்கர் தனது ஒரு கட்டுரையை எழுதினார். அதில், ஹிந்துத்துவா என்பது எது, ஹிந்து என்பவர் யார்? என விவரித்துள்ளார். மேலும், அவர் ஹிந்து சமூக மற்றும் அரசியல் நனவின் தொலைநோக்கு பார்வையை ஊக்குவிக்கிறார்.
அவர் ஒரு ஹிந்துவை பாரத தேசத்தின் தேசபக்தர் என்று வர்ணிக்கிறார். ஹிந்து என்பவர் ஒரு மத அடையாளத்திற்கு அப்பாற்பட்டவர் என கூறும் சாவர்க்கர், ஹிந்துக்களை ஆரியராகவோ, திராவிடராகவோ வரையறுக்கவில்லை.
ஹிந்துக்களை, ‘ஒரு பொதுவான தாய்நாட்டின் குழந்தைகளாக வாழும் மக்கள், ஒரு பொதுவான புனித நிலத்தை வணங்குகிறார்கள்’ என்றே கூறியுள்ளார். ஹிந்து மதம், சமணம், புத்தம், சீக்கியம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் ஒன்றே என்று அவர் விவரித்துள்ளார். ஹிந்து ராஷ்டிரம் என்பது அகண்ட பாரதம் என்று தனது பார்வையை அந்த கட்டுரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார் சாவர்க்கர்.
பாரத சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர் வீர சாவர்க்கர். ஆனால் சிலரால் இவரது பெயர் திட்டமிட்டே மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் வெளியானது. அவருடைய பிறந்த நாளான இன்று அவரது உண்மை வரலாற்றை அறிந்து போற்றுவோம்.