தமிழகத்தில் தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாரதத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் இச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறியும் நோக்கிலேயே இச்சோதனை நடத்தப்படுகிறது.
சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சாதிக் பாஷா கூட்டாளிகள் ரகசிய கூட்டங்கள் நடத்தி வருவதாகவும், இதில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கியதாகவும் தெரியவந்திருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு சோதனை நடத்தி அவ்வப்போது சிலரை கைது செய்து வருகின்றனர்.
கேரளாவில் அண்மையில் 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் மற்றும் ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 16 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவும் தமிழகத்தில் நேற்று சென்னை, திருச்சி உட்பட 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை அடைத்து வைத்திருக்கும் சிறப்பு முகாமிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இம்முகாமில் பெரும்பாலானோர் ஈழத் தமிழர்கள்.
என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கேட்டபோது, “மொத்தம் 25 இடங்களில் சோதனை நடைபெற்றது. இச்சோதனைகளில் 57 செல்போன்கள், 68 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ்கள், 2 லேப் டாப்கள், இலங்கை பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன” என்றார்கள்.