சந்திரசேகர ஆசாத், ஒரு சுதந்திரப் போராட்ட புரட்சியாளர். காவல்துறை அவரைத் தேடிக் கொண்டிருந்தது. தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் இரவு ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்து ஒரு மூதாட்டி வெளியே வந்தாள். நான்தான் சந்திரசேகர ஆசாத். போலீஸ் என்னைத் துரத்துகிறது. இன்று இரவு மட்டும் உங்கள் வீட்டில் மறைந்திருக்க அனுமதி கொடுப்பீர்களா?” என்று கேட்ட ஆசாத்தை மகிழ்ச்சியுடன் உள்ளே வரும்படி அழைத்தாள் அந்த மூதாட்டி. முதலில் அவருக்கு பசியார உணவளித்தாள்.
ஆசாத், அந்த மூதாட்டியின் குடும்ப நிலை பற்றி விசாரித்தபோது பணம் இல்லாமல் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார். அந்த தாய்க்கு உதவ முன்வந்த ஆசாத், தாயே என்னைப் பிடித்துக் கொடுத்தால் ஐயாயிரம் ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்துள்ளது. உடனடியாக போலீசுக்கு நான் உங்கள் வீட்டில் இருக்கும் தகவலைத் தெரிவித்தால் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்து மகளின் திருமண ஏற்பாட்டை கவனியுங்கள்” என்றார்.
மகனே, ஐயாயிரம் என்ன… ஐந்து லட்சமே கிடைத்தாலும் காட்டிக்கொடுக்கும் துரோகத்தை ஒருபோதும் நான் செய்யமாட்டேன். என்னைப் பற்றிக் கவலைப்படாமல் நீ போய் உறங்கு” என்றார். மறுநாள் விடிந்தது. கண்விழித்த மூதாட்டி ஆசாத்தைத் தேடினாள். அவர் படுத்திருந்த படுக்கையில் ஐயாயிரம் ரூபாய் பணக்கட்டு இருந்தது. பக்கத்தில் ஒரு கடிதம் இருந்தது. தாயே இந்தப் பணத்தைப் பயன்படுத்தி மகளின் திருமணத்தை நடத்துங்கள்” என்ற வாசகத்தைப் படித்தபோது அந்த மூதாட்டியின் கண் கலங்கியது.