பெங்களூருவில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு உரையை நிகழ்த்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்,”வெறும் பிழைப்பு மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கக்கூடாது. விலங்குகள் கூட உயிர் வாழ்கின்றன. சாப்பிடுவது, குடிப்பது மற்றும் சொந்த இனத்தை விரிவுபடுத்துவது போன்றவற்றைச் செய்கிறது. புத்திசாலித்தனம் இல்லாத மனிதன் பூமியில் மிகவும் பலவீனமான விலங்கு. ஆனால் பரிணாம வளர்ச்சியின் போக்கில், அறிவாற்றல் தூண்டுதல் அவனது வாழ்க்கையின் போக்கை மாற்றியது, அவன் சிறந்த படைப்பாக மாறினார். தகுதியானவர்கள் மட்டுமே பிழைத்து வாழ முடியும் என்பது காட்டின் சட்டம். அது விலங்குகளுக்கே பொருந்தும். அது மனிதர்களுக்கானது அல்ல. மனிதர்களில் திறமையான நபர், மற்ற பலவீனமானவர்களை வாழ வைப்பார். வலிமை குறைந்தவர்கள் உயிர்வாழ உதவுவார். உலகத்தை வளரச் செய்வதற்கும், மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க உங்கள் திறன்களைப் பயன்படுத்துவதே மனிதனாக இருப்பதற்கான அர்த்தம். பாரதம் கடந்த காலத்திலிருந்து அதன் அறிவுத் தளத்தை எதிர்கால ஆய்வுகள் மூலம் ஒன்றிணைத்து வளர்ந்து வருவதற்கான அறிகுறிகள் இப்போதும் எங்கும் காணப்படுகின்றன. பாரதம் வளரும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது கூறியிருந்தால், நாம் அதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் அவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், அணு இயற்பியலாளர் ஆர் சிதம்பரம், இஸ்ரோ தலைவர் கே. கஸ்தூரிரங்கன், ஹிந்துஸ்தானி பாடகர் எம் வெங்கடேஷ் குமார், அஸ்ஸாமைச் சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் பூர்ணிமா தேவி பர்மன் மற்றும் சி ஸ்ரீனிவாஸ் ஆகிய ஆறு பிரபலங்களுக்கு டாக்டர் மோகன் பாகவத் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். ஸ்ரீ சத்ய சாய் மனித மேன்மை பல்கலைக்கழகம் என்பது ஸ்ரீ சத்ய சாய் லோக சேவா குருகுலம் குழுமத்தின் உயர்கல்வி பிரிவாகும். இது கர்நாடகாவில் 20 மாவட்டங்களில் 27 கல்வி வளாகங்கள், தமிழகம் மற்றும் தெலுங்கானாவில் தலா ஒன்று என பரவியுள்ளது. பண்டைய பாரத லட்சியங்களின் அடிப்படையில் உயர்தர, மதிப்புகள் அடிப்படையிலான கல்வியை வழங்குவதே இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.